• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 
குழம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பாவக்காய் புளி குழம்பு


தேவையானப்பொருட்கள்:

சிறு பாவக்காய் - 1 கப்
சாம்பார் வெங்காயம் - 15 முதல் 20 வரை
பூண்டு பற்கள் - 10 முதல் 15 வரை
தக்காளி - 1
புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு
சாம்பார் தூள் - 1 டேபிள்ஸ்பூன் (குவித்து எடுக்கவும்)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணை - 2  அல்லது  3 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பாவக்காயின் இரு முனைகளையும் கிள்ளி விட்டு, கொதிக்கும் நீரில் போட்டு, சில நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும். (கொதிக்கும் நீரில் சிறிது வெல்லத்தைச் சேர்த்தால், பாவக்காயின் கசப்பு சற்று குறையும்)

புளியை தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து 2  கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை உரித்து வைத்துக் கொள்ளவும்.  தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கடலைப்பருப்பு, வெந்தயம்,  பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுக்கவும்.   பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து சில வினாடிகள் வதக்கவும்.  பின்னர் தக்காளியைச் சேர்த்து சற்று வதக்கிய பின் அதில்  சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறவும்.  பின்னர் அதில் பாவக்காய், புளித்தண்ணீர், உப்பு சேர்த்துக் கலக்கி, மிதமான தீயில் மூடி வைத்து கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதித்து சற்று கெட்டியானவுடன் இறக்கி வைக்கவும்.

இநதக் குழம்பிற்கு "சிறு பாவக்காய்"  (மிதி பாவக்காய் என்றும் சொல்வார்கள்) நன்றாக இருக்கும்.  இல்லையென்றால் சாதரண நீட்ட பாவக்காயையும் உபயோகிக்கலாம்.

உடுப்பி சாம்பார்


வெங்காயம், தக்காளி எதுவும் சேர்க்காமல் செய்யும் இந்த சாம்பார் பற்றிய குறிப்பினை சமீபத்தில் ஒரு நாளிதளில் பார்த்தேன்.  செய்து பார்த்ததில் சுவை உடுப்பி ஓட்டல் சாம்பார் போன்றே இருந்தது.  நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

தேவையானப்பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/4 கப்
புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கத்திரிக்காய் (சிறிய அளவு) - 1
உருளைக்கிழங்கு (சிறிய அளவு) - 1
வெல்லம் பொடித்தது - 1 டீஸ்பூன்

வறுத்தரைக்க:

காய்ந்த மிளகாய் (நடுத்தர அளவு) - 3 அல்லது 4
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

துவரம் பருப்பைக் கழுவி, குக்கரில் போட்டு அத்துடன் ஒரு கப் தண்ணீர், சிறிது மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து குழைய வேக விட்டு எடுக்கவும்.

ஒரு வாணலியில்  சிறிது எண்ணை விட்டு அதில் மிளகாய், தனியா, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். கடைசியில் கறிவேப்பிலையைப் போட்டு சற்று வதக்கி, பின்னர் அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை சிவக்க வறுத்தெடுத்து, வறுத்த பொருட்கள் எல்லவாற்றையும் ஒன்றாகப் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.

கத்திரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை ஊற வைத்து, கரைத்து, புளித்தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து வறுத்து, காய்கறி துண்டுகளைப் போட்டு ஓரிரு வினாடிகள் வதக்கி,  காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து, மூடி வைத்து வேக விடவும்.  காய் நன்றாக வெந்ததும் அதில் புளித்தண்ணீரை விடவும்.  அத்துடன் உப்பு, வெல்லம் ஆகியவற்றையும் சேர்த்து, கொதிக்க விடவும். புளியின் பச்சை வாசனை போனதும் அதில் வேக வைத்துள்ள பருப்பு, அரைத்து வைத்துள்ள விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விட்டு, தேவைப்பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

கவனிக்க:  நான் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு மட்டும் இதில் சேர்த்துள்ளேன்.  பறங்கிக்காய், கேரட் ஆகியவற்றையும் சேர்க்கலாம்.

கருணைக்கிழங்கு குழம்பு


தேவையானப்பொருட்கள்:

கருணைக்கிழங்கு - 100 கிராம்
பூண்டு பற்கள் - 10
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 1
சாம்பார் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு
நல்லெண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

புளியை தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து 2 முதல் 3 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கருணைக்கிழங்கை கழுவி, தோலை சீவி விட்டு, சிறு சதுரத் துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

பூண்டு, வெங்காயம் ஆகியவற்றின் தோலை உரித்து வைக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுக்கவும்.   பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து சில வினாடிகள் வதக்கவும்.  பின்னர் தக்காளியைச் சேர்த்து சற்று வதக்கிய பின் அதில் கருணைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறி விடவும்.  அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறவும்.  பின்னர் அதில் புளித்தண்ணீர், உப்பு சேர்த்துக் கலக்கி, மிதமான தீயில், கிழங்கு வேகும் வரை மூடி போட்டு வேக விடவும். குழம்பு நன்றாகக் கொதித்து, கிழங்கும் வெந்தவுடன் இறக்கி வைக்கவும்.

சூடான சாதத்தில் விட்டு பிசைந்து, சுட்ட அப்பளத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

பின்குறிப்பு:  இந்த குழம்பிற்கு சாதாரணமாக "பிடி கருணை" என்றழைக்கப்படும் சிறிய வகை கிழங்கைத்தான் உபயோகிப்பார்கள். ஆனால் இது எல்லா கடைகளில் கிடைக்காது.  அதனால் "காரா கருணை" அல்லது "சேனைக்கிழங்கு" என்றழைக்கப்படும் பெரிய வகை கிழங்கில் இந்தக் குழம்பை செய்தேன்.  சுவை நன்றாகவே இருந்தது.

முருங்கைக்கீரை பொரிச்சகுழம்பு


தேவையானப்பொருட்கள்:

முருங்கைக்கீரை - ஒரு கட்டு
பயத்தம் பருப்பு - 1/2 கப்
சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வறுத்து அரைக்க:

காய்ந்த மிளகாய் - 2
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சாம்பார் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)

செய்முறை:

முருங்கைக்கீரையை உருவி, அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பயத்தம் பருப்பை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மலர வேக வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்து, ஆறியவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.

முருங்கைக்கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது தண்ணீரைச் சேர்த்து, 3 அல்லது 4 நிமிடங்கள் வேக விடவும்.  பின்னர் அதில் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்து, ஒரு கொதி வரும் வரை வேக விடவும். ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும்.  தேவைப்பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கிளறி மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும். 

குழம்பு நன்றாகக் கொதித்ததும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துக் கொட்டி, இறக்கி வைக்கவும்.

சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

பச்சை பயறு குழம்பு


தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு - 1/2 கப்
புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு
சாம்பார் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1
சாம்பார் வெங்காயம் - 10 முதல் 15 வரை
பூண்டுப்பற்கள் - 2 அல்லது 3
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பச்சை பயறை 5 முதல் 6 மணி நேரம் (அல்லது இரவு முழுவதும்) தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறிய பயறை நன்றாக கழுவி விட்டு ஒரு குக்கரில் போட்டு அத்துடன் சிறிது உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும்.

புளியை ஊற வைத்து பிழிந்தெடுத்து, தேவையான தண்ணீரைச் சேர்த்து 2 கப் அளவிற்கு புளிச்சாற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெந்தயம், பெருங்காயம் சேர்த்து சிவக்க வறுக்கவும்.  பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளிச் சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும்.  புளித்தண்ணீரைச் சேர்த்து அத்துடன் சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டுக் கலந்து  கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், வேக வைத்துள்ள பயறை இலேசாக மசித்து சேர்த்துக் கிளறி விடவும். மீண்டும் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு, இறக்கி வைக்கவும்.


சூடான சாதத்துடன் பரிமாறவும்.

மாம்பழ சாம்பார்

தேவையானப்பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/2 கப்
புளி - சிறு எலுமிச்சம் பழ அளவு
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
நாட்டு மாம்பழம் (சிறிதாக இருக்கும்) - 4 முதல் 5 வரை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

ந்ண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
சாம்பார் வெங்காயம் - 4 அல்லது 5
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

துவரம் பருப்பை நன்றாகக் கழுவி, அத்துடன் 2 கப் தண்ணீரும், மஞ்சள் தூளும் சேர்த்து குக்கரில் குழைய வேகவிட்டு எடுக்கவும்.

புளியை தண்ணீரில் ஊற வைத்து, சாற்றை பிழிந்து எடுக்கவும். புளித்தண்ணீர் 3  கப் அளவிற்கு இருக்க வேண்டும்.

மாம்பழத்தைக் கழுவி, இரண்டு பக்கமும் முக்கால் பாகம் கீறிக் கொள்ளவும். அடி பாகம் வரை வெட்டாமல், மாம்பழத்தின் அடி பாகத்தை அப்படியே வைத்துக் கீறிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீரை விட்டு, அதில் உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். புளித்தண்ணீர் கொதித்து வரும் பொழுது மாம்பழத்தைப் போட்டு மூடி வைத்து, மிதமான தீயில் ஓரிரு நிமிடங்கள் வேக விடவும். பின்னர் அதில் வேக வைத்துள்ளப் பருப்பைச் சேர்த்து மேலும் ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பின்னர் தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளித்துக் கொட்டி இறக்கி வைக்கவும்.

பின்குறிப்பு: இந்த மாம்பழ சாம்பாருக்கு சின்ன சைஸில் கிடைக்கும் நாட்டு மாம்பழத்தை முழுதாகப் போட்டு செய்வார்கள். பெரும்பாலும் அவரவர் தோட்டத்தில் விளையும் பழத்தில், சாம்பார், மோர்க்குழம்பு, ரசம் என்று விதவிதமாக மாங்காய் சீசனில் செய்வார்கள் மார்க்கெட்டிலும் இந்த வகை நாட்டுப் பழங்கள் கிடைக்கும். அப்படி கிடைக்கவில்லை என்றால், பெரிய மாம்பழத்தை (பெரிய துண்டுகளாகப் போட்டு) உபயோகித்தும் செய்யலாம். இந்த சாம்பாரின் சிறப்பு, மாம்பழச்சாறு சாம்பாருடன் கலந்து தனி சுவையைக் கொடுக்கும். சாம்பாரிலுள்ள மாம்பழத்தை சாப்பிட்டால், இனிப்பும், காரமுமாக அதும் ஒரு வித தனி சுவையுடன் இருக்கும்.


 
 

காய்கறி சொதி


"சொதி" அல்லது "சொதி குழம்பு" என்றழைக்கப்படும் இநத "தேங்காய்ப்பால் குழம்பு" திருநெல்வேலி சைவ வீடுகளில் பிரபலமானது. விருந்துகளில் இது நிச்சயமாக இடம் பெறும். குறிப்பாக, திருமணமாகி மாப்பிள்ளை மறு வீடு வரும் பொழுது, இந்தக் குழம்பு கண்டிப்பாக இருக்கும்.

இதில் முருங்கைக்காய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் போன்ற பலவிதமான காய்கறிகளைச் சேர்த்துச் செய்வார்கள். செய்யும் முறை வீட்டிற்கு வீடு சற்று மாறு படும். அடிப்படையில், காய்கறிகளை தேங்காய்ப்பாலில் வேக வைத்து, பருப்பு சேர்த்து செய்யும் குழம்பு இது.

என்னுடைய செய்முறை:

தேவையானப்பொருட்கள்:

தேங்காய் (பெரியது) - 1
உருளைக்கிழங்கு - 2
கேரட் - 1
பீன்ஸ் - 5 அல்லது 6
சாம்பார் வெங்காயம் - 10
பூண்டுப்பற்கள் - 10
எலுமிச்சம் பழச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி - 2 அங்குல நீளத்துண்டு
பச்சை மிளகாய் (சிறியது) - 4 முதல் 5 வரை
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
பச்சை அல்லது கறுப்பு திராட்சை - ஒரு கைப்பிடி (விருப்பமானால்)

செய்முறை:

காய்கறிகளை நன்றாகக் கழுவிக் கொள்ளவும். உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டின் தோலை சீவி விட்டு நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பீன்ஸை 2 அங்குல துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

வெங்காயம் மற்றும் பூண்டின் தோலை உரித்து விட்டு, முழுதாகவே வைத்துக் கொள்ளவும். இஞ்சியின் தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்து, தேவையான தண்ணீரை விட்டு வேக வைத்தெடுக்கவும்.

தேங்காயைத்துருவி கெட்டியான பாலை எடுக்கவும். ஒரு கப் திக்கான பால் கிடைக்கும். அதைத் தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் சிறிது தண்ணீரை தேங்காயுடன் சேர்த்து அரைத்து, இரண்டாம் பாலையும் பிழிந்து எடுக்கவும். மேலும் சிறிது தண்ணீரைச் சேர்த்து மூன்றாம் பாலையும் பிழிந்தெடுக்கவும். இரண்டாவது, மூன்றாவதாக எடுத்தப்பாலை ஒன்றாகச் சேர்க்கவும். மூன்று கப் அளவிற்கு இந்தப் பால் இருக்கும். இல்லையென்றால் சிறிது நீரைச் சேர்த்து 3 கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு பச்சை மிளகாயையும், இஞ்சித்துண்டுகளையும் வதக்கி எடுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அடி கனமான வாணலி அல்லது பாத்திரத்தை அடுப்பிலேற்றி எண்ணை விடவும். எண்ணை சூடானதும் வெங்காயத்தைப் போட்டு சில வினாடிகள் வதக்கவும். பூண்டையும் சேர்த்து மேலும் சில வினாடிகள் வதக்கவும். பின்னர் காய்கறிகளைச் சேர்த்து சற்று வதக்கி, அத்துடன் இரண்டாம்/மூன்றாம் முறை எடுத்து வைத்துள்ள தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும். உப்பு, மஞ்சள் தூளைச் சேர்த்துக் கிளறி விட்டு, மிதமான தீயில் வேக விடவும்.

காய்கறிகள் வெந்ததும், அரைத்து வைத்துள்ள மிளகாய்/இஞ்சி விழுதைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் அத்துடன் வேக வைத்துள்ளப் பருப்பையும் சேர்த்துக் கிளறி கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, திக்கான தேங்காய்ப்பாலைச் சேர்த்துக் கிளறி, ஓரிரு நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து விட்டு இறக்கி வைக்கவும்.

5 அல்லது 10 நிமிடங்கள் கழித்து, எலுமிச்சம் பழச்சாற்றைச் சேர்த்துக் கலக்கி விடவும்.

பச்சை திராட்சைப் பழங்களையும் சேர்த்து கிளறி, இஞ்சி துவையல், உருளைக்கிழங்கு சிப்ஸ் அல்லது காரமான உருளைக் கிழங்கு கறியுடன் பரிமாறவும்.

சாதரணமாக இதை சூடான சாதத்துடன் பரிமாறுவார்கள். ஆனால் இடியாப்பம் மற்றும் ஆப்பத்துடன் சேர்த்து சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

கவனிக்க: ஒரு பெரிய தேங்காயில் ஒரு கப் திக்கான பால் கிடைக்கும். காய் சிறியதாக இருந்தால் மேலும் ஒரு மூடி தேங்காயைச் சேர்த்துக் கொள்ளவும். கடைகளில் கிடைக்கும் தேங்காய்ப்பாலையும் உபயோகிக்கலாம். அப்படி செய்யும் பொழுது, ஓரிரு டேபிள்ஸ்பூன் திக்கான பாலில் தேவையான நீரைச் சேர்த்து கலந்து, அதில் காய்களை வேக வைக்கவும்.

பூண்டு கத்திரிக்காய் புளிக்குழம்பு


ஆச்சி வத்தக்குழம்பு மசாலா உபயோகித்து இந்தக் குழம்பை செய்தேன். சுவை நன்றாக இருந்தது. இல்லையென்றால் வீட்டில் தயாரித்த வத்தக்குழம்பு பொடியை இதற்கு உபயோகிக்கலாம்.

தேவையானப்பொருட்கள்:

கத்திரிக்காய் - 4
பூண்டு பற்கள் - 20 முதல் 25 வரை
சாம்பார் வெங்காயம் - 10 முதல் 15 வரை
புளி - எலுமிச்சம் பழ அளவு
வத்தக்குழம்பு பொடி - 2 டீஸ்பூன் (குவித்து அளக்கவும்)
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணை - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பூண்டு, வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும். கத்திரிக்காயை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

புளியை ஊற வைத்து, கரைத்து சாற்றை வடிகட்டிக் கொள்ளவும். தேவையான தண்ணீரைச் சேர்த்து இரண்டரைக் கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். அதில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், வத்தக்குழம்பு பொடி ஆகியவற்றைச் சேர்க்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், பூண்டு, வெங்காயம் (முழுதாக சேர்க்கவும்), கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றைச் சேர்த்து 2/3 நிமிடங்கள் வதக்கவும் பின்னர் அதில் கத்திரிக்காய் துண்டுகளைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கி, புளித்தண்ணீரைச் சேர்க்கவும். தேவைப்பட்டால் மேலும் சிறிது நீரைச் சேர்த்துக் கிளறி விடவும். மூடி போட்டு, மிதமான தீயில் கொதிக்க விடவும். காய் வெந்து, எண்ணை பிரிய ஆரம்பித்ததும், இறக்கி வைக்கவும்.

பூண்டு வெங்காயக் கார குழம்பு


தேவையானப்பொருட்கள்:

சாம்பார் வெங்காயம் - 10 முதல் 15 வரை
பூண்டுப்பற்கள் - 8 முதல் 10 வரை
தக்காளி - 1
புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வறுத்தரைக்க:

காய்ந்த மிளகாய் - 5 முதல் 6 வரை
தனியா - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கச கசா - 1 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு (2")

தாளிக்க:

நல்லெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

புளியை தண்ணீரில் ஊற வைத்து, 2 கப் அளவிற்கு புளி தண்ணீரை கரைத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தோலுரித்துக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, வறுத்தரைக்க கொடுத்துள்ள பொருட்களை, தனித்தனியாக சிவக்க வறுத்தெடுத்து, சற்று ஆற விட்டு, நன்றாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.

அடி கனமான ஒரு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணையை சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும் அதில் கடுகு போட்டு, அது வெடித்தவுடன், உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதில் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் தக்காளித்துண்டுகளையும், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து, தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள விழுதினைச் சேர்த்துக் கிளறி, தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கொதித்து வரும் பொழுது, புளித்தண்ணீரைச் சேர்த்து, நன்றாகக் கலக்கி மீண்டும் கொதிக்க விடவும். குழம்பு மீண்டும் கொதித்து, சற்று கெட்டியானவுடன், இறக்கி வைக்கவும்.

இஞ்சி, பூண்டு சுவையுடன் சற்று காரமான இந்தக் குழம்பு, குளிர் காலத்திற்கு மிகவும் ஏற்றது.

கத்திரிக்காய் மசாலா குழம்பு


தேவையானப்பொருட்கள்:

கத்திரிக்காய் - 5 அல்லது 6 (ஒரே அளவான சிறிய கத்திரிக்காய்)
புளி - எலுமிச்சம் பழ அளவு
வெங்காயம் - 1
பூண்டு - 4 அல்லது 5 பற்கள்
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

அரைக்க:

தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 2 அல்லது 3


தாளிக்க:

பட்டை - ஒரு சிறு துண்டு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணை - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை

செய்முறை:

புளியை ஊறவைத்து கெட்டியாகக் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

கத்திரிக்காயை நான்காகக் கீறி விட்டு, அடிபாகத்தை வெட்டாமல் முழுதாக வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய்த்துருவல், கசகசா, முந்திரி ஆகியவற்றை, சிறிது நீர் தெளித்து நன்றாக அரைத்து, அரைத்த மிக்ஸியையும் கழுவி அதையும் விழுதுடன் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் பட்டையைப் போட்டு பொரிக்கவும். பின் அதில் கடுகு, சோம்பு போட்டு, கடுகு வெடித்தவுடன், வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் கத்திரிக்காயைச் சேர்த்து வதக்கவும். 5 நிமிடங்கள் வதக்கியபின் அதில் தக்காளியைச் சேர்த்து, தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கி விடவும். அதன் பின் அதில் புளித்தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, தேவையான அளவு சிறிது தண்ணீரையும் சேர்த்து கலந்து விட்டு கொதிக்க விடவும். குழம்பு கொதி வந்து, கத்திக்காயும் நன்றாக வெந்தவுடன், தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைக்கவும்.

இதில் கத்திரிக்காயிற்குப் பதில் உருளைக் கிழங்கைச் சேர்த்தும் செய்யலாம். அல்லது உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் இரண்டையும் சேர்த்து செய்யலாம். மசாலா வாசனை பிடித்தவர்களுக்கு இந்த குழம்பு மிகுந்த சுவையாயிருக்கும்.

தக்காளி குழம்பு


தேவையானப்பொருட்கள்:

தக்காளி - 4 (நடுத்தர அளவு)
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 4
புளி - சிறு எலுமிச்சம் பழ அளவு
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
முஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணை - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

தக்காளியை நான்கைந்து துண்டுகளாக வெட்டி, ஒரு டீஸ்பூன் எண்ணையில் 3 நிமிடங்களுக்கு வதக்கி, ஆறவைத்து பின்னர் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய வெங்காயத்தில் பாதியை எடுத்து ஒரு டீஸ்பூன் எண்ணையில் வதக்கிக் கொள்ளவும். அத்துடன் பூண்டு, முந்திரி, தேங்காய் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கி, விழுதாக அரைத்தெடுக்கவும்.

புளியை ஊற வைத்து, தேவையான தண்ணீரைச் சேர்த்து பிழிந்து, ஒன்றரைக்கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் மீதி எண்ணையை விட்டு சூடானதும் கடுகு போடவும், கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் சீரகம், வெந்தயம் ஆகியவற்றைச் சேர்க்கவும். (வெந்தயம் கருகி விடாமல் பார்த்துக் கொள்ளவும்). பின்னரி அதில் மீதியுள்ள வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று மினுமினுப்பாக வதங்கியதும் தேங்காய் விழுதைப் போட்டு சற்று வதக்கவும். பின்னர் அதில் தக்காளி விழிது, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக எண்ணை பிரியும் வரை வதக்கவும். பின்னர் அதில் புளித்தண்ணீரையும் உப்பையும் சேர்த்துக் கிளறி விடவும். (தேவைப்பட்டால் சிறிது நீரையும் சேர்த்துக் கொள்ளலாம்).. அடுப்பை மிதமான தீயில் வைத்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

அரைத்து விட்ட சாம்பார்


தேவையானப்பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/2 கப்
முருங்கைக்காய் - 1 (அல்லது விருப்பமான காய் சிறிதளவு)
சாம்பார் வெங்காயம் - 5 முதல் 6 வரை
தக்காளி - 1
புளி - ஒரு சிறு எலுமிச்சம்பழ அளவு
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வறுத்தரைக்க:

காய்ந்த மிளகாய் - 6 முதல் 8 வரை
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 2 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

துவரம் பருப்புடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

முருங்கைக்காய் அல்லது விருப்பமான காயை 2 அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை தோலுரித்து விட்டு நீள வாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை ஊற வைத்து, கரைத்துப் பிழிந்துக் கொள்ளவும். புளித்தண்ணீர் 2 கப் அளவிற்கு இருக்க வேண்டும்.

ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் வறுக்கக் கொடுத்துள்ளப் பொருட்களைப் போட்டு சற்று சிவக்க வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். அரைத்தப்பின் மிக்ஸியைக் கழுவி அந்த நீரையும், அரைத்த விழுதில் சேர்த்துக் கொள்ளவும்.

வாணலி அல்லது அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி அதில் 1 டீஸ்பூன் எண்ணை விட்டு சாம்பார் வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் தக்காளித்துண்டுகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியவுடன் அத்துடன் முருங்கைக்காய் அல்லது நறுக்கி வைத்துள்ள வேறு காயைப் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றையும் போட்டு காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து, காய் வேகும் வரை கொதிக்க விடவும். காய் வெந்ததும் புளித்தண்ணீரைச் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் அதில் அரைத்து வைத்துள்ள விழுது, வேக வைத்துள்ள பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பின்னர் அதில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.

கறிவேப்பிலை குழம்பு


தேவையானப்பொருட்கள்:

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
மிளகு - 2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
புளி - எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு


செய்முறை:

உப்பு, புளி இரண்டையும் ஊற வைத்து, கரைத்து, 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் கறிவேப்பிலையைப் போட்டு சிறிது வதக்கி எடுத்துக் கொள்ளவும். பின்னர் அத்துடன் வறுத்து வைத்துள்ள பருப்புகள், மிளகாய், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

தேங்காய்த்துருவலை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் மீதமுள்ள எண்ணையை விட்டு, சூடானதும் அதில் கடுகு போட்டு, வெடிக்க ஆரம்பித்ததும் சீரகம், வெந்தயம் போட்டு, வெந்தயம் சற்று சிவந்ததும் (கருக விடக்கூடாது) அதில் புளித்தண்ணீரை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் பொடித்து வைத்துள்ள கறிவேப்பிலைப் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கி விடவும். மூடி போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து, தேவையானால் சிறிது நீரையும் சேர்த்துக் கிளறி சிறு தீயில் மீண்டும் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

குறிப்பு: விருப்பமானால் ஓரிரண்டு பூண்டுப்பற்கள், மற்றும் சாம்பார் வெங்காயத்தையும் தாளிப்பில் சேர்க்கலாம்.

நல்ல காரசாரமான இந்தக்குழம்பு குளிர் காலத்துக்கு ஏற்றது.

இரு புளிக்குழம்பு


இரண்டு வகை புளிப்பு (புளி, மற்றும் தயிர்) சேர்த்து செய்யப்படுவதால், இதை இரு புளிக்குழம்பு என்று அழைப்பார்கள். வத்தக்குழம்பு, மோர்குழம்பு இரண்டும் கலந்த சுவையில் இருக்கும்.

தேவையானப்பொருட்கள்:

புளி - சிறு எலுமிச்சம் பழ அளவு
தயிர் - 1 கப்
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
வெண்டைக்காய் - 4 அல்லது 5

வறுத்தரைக்க:

காய்ந்த மிளகாய் - 5 முதல் 6 வரை
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1/2 அல்லது 3/4 கப்

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

புளியை ஊற வைத்து, கரைத்து, 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் உளுத்தம் பருப்பு, மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, அத்துடன் தேங்காய்த்துருவலையும் சேர்த்து சற்று வதக்கி, ஆற விட்டு, பின்னர் சிறிது நீரைச் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

வெண்டைக்காயை இரண்டு அங்குல நீளத்திற்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் எண்ணையை வாணலியில் விட்டு, அதில் வெண்டைக்காயைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீரை ஊற்றி, அத்துடன் வதக்கிய வெண்டைக்காய், உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்துக் கொண்டு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை, ஒன்று அல்லது ஒன்றரைக் கப் நீரில் கரைத்து குழம்பில் ஊற்றிக் கிளறி விடவும். குழம்பு மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தயிரைக் கட்டியில்லாமல் நன்றாகக் கடைந்து ஊற்றவும். (கெட்டியான மோர் இருந்தாலும் சேர்க்கலாம்). அடுப்பை மிதமான தீயில் வைத்து, குழம்பு மீண்டும் ஒரு முறை கொதிக்க ஆரம்பித்ததும், இறக்கி வைத்து, தாளித்துக் கொட்டவும்.

கவனிக்க: இந்தக் குழம்பிற்கு எந்த எண்ணையையும் உபயோகிக்கலாம். ஆனால் தேங்காய் எண்ணையை உபயோகப்படுத்தினால், சுவை வித்தியாசமாக இருக்கும்.

குறிப்பு: இந்தக் குழம்பில் விருப்பமான எந்தக்காயையும் சேர்க்கலாம். ஆனால், கத்திரிக்காய், வெண்டைக்காய், வெள்ளைப்பூசணிக்காய், சௌசௌ, வாழைத்தண்டு ஆகியவை பொருத்தமாயிருக்கும். வெண்டைக்காயை சேர்ப்பதானால், மேற்கூறியபடி, ஒரு டீஸ்பூன் எண்ணையில் வதக்கி சேர்க்கவும். கத்திரிக்காயென்றால், துண்டுகளாக்கி அப்படியே புளித்தண்ணீரில் சேர்க்கலாம். மற்ற காய்கள் என்றால், ஆவியில் வேக விட்டு பின்னர் சேர்க்கவும்.

மொச்சைக்கொட்டை குழம்பு


தேவையானப்பொருட்கள்:

மொச்சைக்கொட்டை - 1 கப்
புளி - எலுமிச்சம் பழ அளவு
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 4 அல்லது 5
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் மொச்சைக்கொட்டையை சிவக்க வறுத்து, குக்கரில் போட்டு அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து, 3 அல்லது 4 விசில் வரும் வரை வேகவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

உப்பு, புளி இரண்டையும் ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, பிழிந்து, புளித்தண்ணீரைத் தனியாக எடுக்கவும். புளித்தண்ணீர் 3 கப் அளவிற்கு இருக்க வேண்டும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய்த்துருவலை விழுதாக அரைத்தெடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீரை ஊற்றி அதில் வேக வைத்த மொச்சைக்கொட்டை, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கி அடுப்பிலேற்றிக் கொதிக்க விடவும். குழம்பு நனறாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை போட்டுக் கிளறவும். மிதமான தீயில் வைத்து மீண்டும் ஒரு 5 நிமிடம் கொதிக்க விட்டு, அதில் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டி இறக்கி வைக்கவும்.

கீரை சாம்பார்


தேவையானப்பொருட்கள்:

கீரை (எந்த வகை கீரையானாலும்) பொடியாக நறுக்கியது - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
புளி - எலுமிச்சம் பழ அளவு
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிப்பதற்கு:

எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சாம்பார் வெங்காயம் - 4 அல்லது 5 (நீளவாக்கில் வெட்டியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

துவரம் பருப்பை நன்றாகக் கழுவி, அத்துடன் 2 கப் தண்ணீரும், மஞ்சள் தூளும் சேர்த்து குக்கரில் குழைய வேகவிட்டு எடுக்கவும்.

புளியை தண்ணீரில் ஊற வைத்து, சாற்றை பிழிந்து எடுக்கவும். புளித்தண்ணீர் 2 கப் அளவிற்கு இருக்க வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெந்தயம், பெருங்காயம் போட்டு சற்று வறுத்து, அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பின் அதில் தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும். தக்காளி வதங்கியவுடன், வேக வைத்த பருப்பையும், உப்பையும் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், புளித்தண்ணீரில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கி ஊற்றவும். மேலும் சில வினாடிகள் கொதித்தப்பின், அதில் கீரையைப் போட்டுக் கிளறி விட்டு, மிதமான தீயில் மூடி வைத்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் கொதித்த பின் இறக்கி வைக்கவும்.

கத்திரிக்காய் காராமணிக் குழம்பு


தேவையானப்பொருட்கள்:

கத்திரிக்காய் - 2
காராமணிப்பயறு - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
புளி - எலுமிச்சம் பழ அளவு
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 10
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் காராமணியை சிவக்க வறுத்து, குக்கரில் போட்டு அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து, 2 அல்லது 3 விசில் வரும் வரை வேகவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

உப்பு, புளி இரண்டையும் ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, பிழிந்து, புளித்தண்ணீரைத் தனியாக எடுக்கவும்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் கசகசா, சீரகம், தேங்காய்த்துருவல் ஆகியவற்றைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்தெடுத்து, சற்று ஆறியபின், விழுதாக அரைத்தெடுக்கவும்.

கத்திரிக்காயை நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீரை ஊற்றி அதில் கத்திரிக்காய் துண்டுகள், வேக வைத்த காராமணி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து மேலும் 2 கப் நீரையும் சேர்த்துக் கலக்கி அடுப்பிலேற்றிக் கொதிக்க விடவும். குழம்பு கொதித்து, காய் வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை போட்டுக் கிளறவும். மிதமான தீயில் வைத்து மீண்டும் ஒரு 5 நிமிடம் கொதிக்க விட்டு, அதில் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டி இறக்கி வைக்கவும்.

வாழைக்காய் பால் குழம்பு


தேவையானப்பொருட்கள்:

வாழைக்காய் - 1
தேங்காய் - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 2 அல்லது 3 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

தேங்காயைத்துருவி கெட்டியான பாலை எடுக்கவும். பின்னர் சிறிது தண்ணீரை தேங்காயுடன் சேர்த்து அரைத்து, இரண்டாம் பாலையும் பிழிந்து எடுக்கவும்.

கடையில் கிடைக்கும் தேங்காய்ப்பாலை உபயோகித்தால், மேற்கண்ட வேலை மிச்சம்.

வாழைக்காயின் தோலை சீவி விட்டு, நீளவாக்கில் நான்காக வெட்டவும். பின்னர் அதை 3 அங்குலத் துண்டுகளாக வெட்டவும்.

வெட்டிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் இரண்டாம் பாலைச் சேர்க்கவும். காய்கள் மூழ்கும் அளவிற்கு பால் இருக்க வேண்டும். தேவை பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ரெடிமேட் தேங்காய் பால் உபயோகித்தால், 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் திக்கான பாலுடன் சிறிது தண்ணீரைச் சேர்த்து உபயோகிக்கவும்.

காய் மூழ்கும் அளவிற்கு பாலும் தண்ணீரும் சேர்த்து, அத்துடன் உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும். காய் நன்றாக வெந்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, திக்கான பாலை ஊற்றவும். மீண்டும் குழம்பு ஒரு கொதி வந்ததும், இறக்கி வைத்து, கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.

தாளிப்பதற்கு தேங்காய் எண்ணை உபயோகித்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

சூடான சாதம் மற்றும் தொட்டுக் கொள்ள, பொரித்த அப்பளம், வடவம் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.

மாங்காய், முருங்கைக்காய், பலாகொட்டை சாம்பார்


மாங்காய், முருங்கைக்காய், பலாகொட்டை சாம்பார் தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தமான ஒன்று. கோடைகாலத்தில், இந்த மூன்று காய்களும் தாராளமாக கிடைப்பதால், அனேகமாக எல்லோர் வீட்டிலும் வாரம் ஒரு முறையாவது இந்த சாம்பார் கண்டிப்பாக இருக்கும்.

தேவையானப்பொருட்கள்:

மாங்காய் - 1 (நடுத்தர அளவு)
முருங்கைக்காய் - 1
பலாக்கொட்டை - 5 முதல் 6 வரை
தக்காளி - 1
துவரம் பருப்பு - 1 கப்
புளி - சிறு எலுமிச்சம் பழ அளவு
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிப்பதற்கு:

எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
சாம்பார் வெங்காயம் - 4 அல்லது 5 (நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்)

செய்முறை:

துவரம் பருப்பை கழுவி, 2 கப் தண்ணீர் சேர்த்து, ஒரு சிட்டிகை மஞ்சள் தூளைப்போட்டு, குக்கரில் வைத்து குழைய வேக விட்டு எடுக்கவும்.

புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும்.

தக்காளியை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பலாகொட்டையை குறுக்கே இரண்டாக வெட்டி, அதன் மேலுள்ள வெள்ளைத் தோலை நீக்கி, 2 கப் நீரில் போட்டு வேக விட்டு, தனியாக எடுத்து வைக்கவும்.

முருங்கைக்காயை 2 அல்லது 3 அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும். மாங்காயை கொட்டையுடன் நான்கு அல்லது 5 துண்டுகளாக விட்டிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முருங்கைக்காய் துண்டுகள், வேக வைத்த பலாகொட்டை, தக்காளி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து 5 அல்லது 6 நிமிடங்கள் வேக விடவும். பின்னை அதில் மாங்காய் துண்டுகளை சேர்த்து மாங்காய் வேகும் வரை மிதமான தீயில் வைக்கவும். மாங்காய் சீக்கிரம் வெந்துவிடுமாகையால், முருங்கைக்காய் சற்று வெந்ததும்தான் மாங்காயைச் சேர்க்க வேண்டும். மாங்காயை முதலிலேயே சேர்த்தால், மாங்காய் வெந்து கரைந்து விடும்.

காய்கள் வெந்தவுடன், புளித்தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அதில் வெந்தப் பருப்பை கடைந்து சேர்க்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு, அது வெடிக்க ஆரம்பித்ததும், பெருங்காயத்தூள், வெட்டி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, கொதிக்கும் சாம்பாரில் கொட்டி, இறக்கி வைக்கவும்.

பொரிச்ச குழம்பு


தேவையானப்பொருட்கள்:

காய்கறி நறுக்கியது - 2 கப் (வெள்ளைக்கத்திரிக்காய், பெங்களூர் கத்திரிக்காய், அவரைக்காய், குடமிளகாய் அல்லது விருப்பமான எந்தக் காயையும் சேர்க்கலாம்)
பயத்தம் பருப்பு - 1/2 கப்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் (குவித்து அளக்கவும்)
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

அரைத்தெடுக்க:

தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
அரிசி மாவு - 1 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

பயத்தம் பருப்பை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மலர வேக வைத்துக் கொள்ளவும். குழைய விடவேண்டாம்.

காய்கறித்துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு த்ண்ணீரை சேர்த்து வேக விடவும். காய் வெந்தவுடன் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்து கொதிக்க விடவும்.

தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், அரிசி மாவு ஆகியவற்றை அரைத்தெடுத்து, அத்துடன் அரைத்த மிக்ஸியைக் கழுவி அந்த நீரையும் சேர்த்து, கொதிக்கும் குழம்பில் விட்டுக் கிளறவும். மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து பின்னர் அதில் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.

சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள பொரித்த அப்பளம் அல்லது வடவம் நன்றாக இருக்கும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...