• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

வாழைக்காய் பால் குழம்பு


தேவையானப்பொருட்கள்:

வாழைக்காய் - 1
தேங்காய் - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 2 அல்லது 3 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

தேங்காயைத்துருவி கெட்டியான பாலை எடுக்கவும். பின்னர் சிறிது தண்ணீரை தேங்காயுடன் சேர்த்து அரைத்து, இரண்டாம் பாலையும் பிழிந்து எடுக்கவும்.

கடையில் கிடைக்கும் தேங்காய்ப்பாலை உபயோகித்தால், மேற்கண்ட வேலை மிச்சம்.

வாழைக்காயின் தோலை சீவி விட்டு, நீளவாக்கில் நான்காக வெட்டவும். பின்னர் அதை 3 அங்குலத் துண்டுகளாக வெட்டவும்.

வெட்டிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் இரண்டாம் பாலைச் சேர்க்கவும். காய்கள் மூழ்கும் அளவிற்கு பால் இருக்க வேண்டும். தேவை பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ரெடிமேட் தேங்காய் பால் உபயோகித்தால், 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் திக்கான பாலுடன் சிறிது தண்ணீரைச் சேர்த்து உபயோகிக்கவும்.

காய் மூழ்கும் அளவிற்கு பாலும் தண்ணீரும் சேர்த்து, அத்துடன் உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும். காய் நன்றாக வெந்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, திக்கான பாலை ஊற்றவும். மீண்டும் குழம்பு ஒரு கொதி வந்ததும், இறக்கி வைத்து, கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.

தாளிப்பதற்கு தேங்காய் எண்ணை உபயோகித்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

சூடான சாதம் மற்றும் தொட்டுக் கொள்ள, பொரித்த அப்பளம், வடவம் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.

2 கருத்துகள்:

ஞாபகம் வருதே... சொன்னது…

புது ரெசிபி...குட்
நாள் ஆனாலும் சுறுங்காத வடுமாங்காய் போடுவது பற்றி டிப்ஸ் தரலாமே?

பெயரில்லா சொன்னது…

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

நீண்ட நாட்கள் வைத்திருக்கும் ஊறுகாய் என்றாலே, ஊற வைத்து, காய வைத்து, மீண்டும் ஊறவைத்து என்று நீண்டு கொண்டே போகும். நேரமின்மையால் இந்த ஊறுகாய் பக்கமே போவதில்லை. ஆனாலும், அம்மா, பாட்டி ஆகியோர் செய்முறையை வைத்துப் பார்த்தால், வடு மாங்காய் போடுவதற்கு, ஒரு பெரிய ப்ரொஜட செய்வதுபோல் திட்டம் வைத்திருப்பார்கள். சிறு கோலி சைஸ் வடுமாங்காயாய்ப் பார்த்து வாங்கி (பெரிய சைஸ் என்றால் சீக்கிரம் அழுகி விடும் என்பார்கள்).


தண்ணீரில் போட்டு கழுவி நிழலில் உலர்த்தி, ஒவ்வொரு வடுவாக எடுத்துத் துடைத்து, அதன் மேல் விளக்கெண்ணைத் தடவி, ஒரு ஜாடியில் உப்பும், வடுவுமாக மாறி மாறிப் போட்டு ஊறவைத்துக் குலுக்கி, ஜாடியின் மேல் வெள்ளைத்துணியைக்கட்டி (வெயில் நேராக படாமல் இருக்க இந்த உத்தி) வெயிலில் வைத்து, பின்னர் மிளகாய், கடுகு ஆகியவற்றை வ்டு ஊறிய உப்பு நீரிலேயே அரைத்துச் சேர்த்து வைத்துக் கொள்வார்கள். தோல் சுருங்காமல் இருக்கும் சூட்சுமம் எண்ணையில் இருக்கிறது. விளகெண்ணைக்குப்பதில், நல்லெண்ணைத் தடவி உபயோகித்தால் அவ்வளவாக சுருங்காது. மேலும் வடுமாங்காயும் சிறிய அளவில் உருண்டையாயிருக்க வேண்டும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...