• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

காய்கறி சொதி


"சொதி" அல்லது "சொதி குழம்பு" என்றழைக்கப்படும் இநத "தேங்காய்ப்பால் குழம்பு" திருநெல்வேலி சைவ வீடுகளில் பிரபலமானது. விருந்துகளில் இது நிச்சயமாக இடம் பெறும். குறிப்பாக, திருமணமாகி மாப்பிள்ளை மறு வீடு வரும் பொழுது, இந்தக் குழம்பு கண்டிப்பாக இருக்கும்.

இதில் முருங்கைக்காய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் போன்ற பலவிதமான காய்கறிகளைச் சேர்த்துச் செய்வார்கள். செய்யும் முறை வீட்டிற்கு வீடு சற்று மாறு படும். அடிப்படையில், காய்கறிகளை தேங்காய்ப்பாலில் வேக வைத்து, பருப்பு சேர்த்து செய்யும் குழம்பு இது.

என்னுடைய செய்முறை:

தேவையானப்பொருட்கள்:

தேங்காய் (பெரியது) - 1
உருளைக்கிழங்கு - 2
கேரட் - 1
பீன்ஸ் - 5 அல்லது 6
சாம்பார் வெங்காயம் - 10
பூண்டுப்பற்கள் - 10
எலுமிச்சம் பழச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி - 2 அங்குல நீளத்துண்டு
பச்சை மிளகாய் (சிறியது) - 4 முதல் 5 வரை
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
பச்சை அல்லது கறுப்பு திராட்சை - ஒரு கைப்பிடி (விருப்பமானால்)

செய்முறை:

காய்கறிகளை நன்றாகக் கழுவிக் கொள்ளவும். உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டின் தோலை சீவி விட்டு நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பீன்ஸை 2 அங்குல துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

வெங்காயம் மற்றும் பூண்டின் தோலை உரித்து விட்டு, முழுதாகவே வைத்துக் கொள்ளவும். இஞ்சியின் தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்து, தேவையான தண்ணீரை விட்டு வேக வைத்தெடுக்கவும்.

தேங்காயைத்துருவி கெட்டியான பாலை எடுக்கவும். ஒரு கப் திக்கான பால் கிடைக்கும். அதைத் தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் சிறிது தண்ணீரை தேங்காயுடன் சேர்த்து அரைத்து, இரண்டாம் பாலையும் பிழிந்து எடுக்கவும். மேலும் சிறிது தண்ணீரைச் சேர்த்து மூன்றாம் பாலையும் பிழிந்தெடுக்கவும். இரண்டாவது, மூன்றாவதாக எடுத்தப்பாலை ஒன்றாகச் சேர்க்கவும். மூன்று கப் அளவிற்கு இந்தப் பால் இருக்கும். இல்லையென்றால் சிறிது நீரைச் சேர்த்து 3 கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு பச்சை மிளகாயையும், இஞ்சித்துண்டுகளையும் வதக்கி எடுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அடி கனமான வாணலி அல்லது பாத்திரத்தை அடுப்பிலேற்றி எண்ணை விடவும். எண்ணை சூடானதும் வெங்காயத்தைப் போட்டு சில வினாடிகள் வதக்கவும். பூண்டையும் சேர்த்து மேலும் சில வினாடிகள் வதக்கவும். பின்னர் காய்கறிகளைச் சேர்த்து சற்று வதக்கி, அத்துடன் இரண்டாம்/மூன்றாம் முறை எடுத்து வைத்துள்ள தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும். உப்பு, மஞ்சள் தூளைச் சேர்த்துக் கிளறி விட்டு, மிதமான தீயில் வேக விடவும்.

காய்கறிகள் வெந்ததும், அரைத்து வைத்துள்ள மிளகாய்/இஞ்சி விழுதைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் அத்துடன் வேக வைத்துள்ளப் பருப்பையும் சேர்த்துக் கிளறி கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, திக்கான தேங்காய்ப்பாலைச் சேர்த்துக் கிளறி, ஓரிரு நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து விட்டு இறக்கி வைக்கவும்.

5 அல்லது 10 நிமிடங்கள் கழித்து, எலுமிச்சம் பழச்சாற்றைச் சேர்த்துக் கலக்கி விடவும்.

பச்சை திராட்சைப் பழங்களையும் சேர்த்து கிளறி, இஞ்சி துவையல், உருளைக்கிழங்கு சிப்ஸ் அல்லது காரமான உருளைக் கிழங்கு கறியுடன் பரிமாறவும்.

சாதரணமாக இதை சூடான சாதத்துடன் பரிமாறுவார்கள். ஆனால் இடியாப்பம் மற்றும் ஆப்பத்துடன் சேர்த்து சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

கவனிக்க: ஒரு பெரிய தேங்காயில் ஒரு கப் திக்கான பால் கிடைக்கும். காய் சிறியதாக இருந்தால் மேலும் ஒரு மூடி தேங்காயைச் சேர்த்துக் கொள்ளவும். கடைகளில் கிடைக்கும் தேங்காய்ப்பாலையும் உபயோகிக்கலாம். அப்படி செய்யும் பொழுது, ஓரிரு டேபிள்ஸ்பூன் திக்கான பாலில் தேவையான நீரைச் சேர்த்து கலந்து, அதில் காய்களை வேக வைக்கவும்.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

புதிய சொதி ! பகிர்விற்கு நன்றி !

Rathinamani சொன்னது…

சூப்பர்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...