• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பலாப்பழ அல்வா மற்றும் பாயசம்

இது பலாப்பழ சீசன்.  இப்பொழுது கிடைக்கும் பழத்தை உபயோகித்து, பலாப்பழ விழுதை செய்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் பொழுது, "இனிப்பு இலை அடை", "கொழுக்கட்டை", "பாயசம்" என்று விதவிதமாக சமைக்கலாம். பெரும் அளவில் செய்ய முடியாவிட்டால், தேவைக்கேற்ற பலாச்சுளைகளை வாங்கி சிறு அளவில் செய்யலாம்.

பலாப்பழ விழுது
  

தேவையானப்பொருட்கள்:

பலாச்சுளை - 10 முதல் 15 வரை
பொடித்த வெல்லம் - 1 கப்
சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை

செய்முறை:

பலாச்சுளையிலிருந்து, கொட்டையை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி, அத்துடன் 1/4 தண்ணீர் சேர்த்து, பிரஷ்ஷர் குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும்.  இதை மைக்ரோவேவ் அவனிலும் அல்லது திறநத பாத்திரத்திலும் வேக வைத்தெடுக்கலாம்.  வெந்தப் பலாச்சுளை சற்று ஆறியதும், மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.

விழுது எவ்வளவு இருக்கிறதோ அதற்கு சம அளவிற்கு வெல்லம் சேர்க்க வேண்டும்.  மேற்கூறிய அளவிற்கு ஒரு கப் வரை விழுது கிடைக்கும்.  எனவே ஒரு கப் பொடித்த வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு 1/4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.  வெல்லம் கரைந்து, கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பிலிருந்து எடுத்து வடிகட்டவும்.  வடிகட்டிய வெல்லப்பாகை ஒரு அடி கனமான் வாணலியில் விட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள பலாச்சுளை விழுதையும் சேர்த்து, அடுப்பிலேற்றி, மிதமான தீயில் கிளறவும்.  பாகும், விழுதும் நன்றாகச் சேர்ந்து, கெட்டியாக சுருண்டு வரும் வரைக் கிளறி, சுக்குப்பொடியைத் தூவி மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

பலாப்பழ அல்வா


அல்வா செய்ய வேண்டுமென்றால், மேற்கண்ட முறையில் விழுது தயாரித்து, சுக்குப் பொடிக்குப் பதில் சிறிது ஏலக்காய்த் தூள், வறுத்த முந்திரிப்பருப்பு, சிறிது நெய் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

பலாப்பழ பாயசம் 


பாயசம் செய்ய மேற்கண்ட முறையில் விழுது தயாரித்து, கடைசியில் ஒரு கப் தேங்காய்பாலைச் சேர்த்துக் கிளறி, நெய்யில் வறுத்த சிறிதாக நறுக்கிய தேங்காய்த்துண்டுகள், முந்திரி,  ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.  தேங்காய்பாலிற்குப்பதில் சாதாரண பாலையும் சேர்க்கலாம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...