தேவையானப்பொருட்கள்:
சாதம் - 2 கப்
மாங்காய்த்துருவல் - 1 கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணை - 4 முதல் 5 டீஸ்பூன் வரை
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - சிறிது
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
ஒரு பச்சை மாங்காயை எடுத்து, தோல் சீவி துருவிக் கொள்ளவும். மாங்காய் துருவல் ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். (புளிப்புத்தன்மை மற்றும் அவரவர் ருசிக்கேற்ப மாங்காய்த்துருவலை சற்று கூட்டி அல்லது குறைத்துக் கொள்ளலாம்).
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் எண்ணை விடவும். எண்ணை காய்ந்ததும் அதில் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை மற்றும் முந்திரிப்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிப்போடவும். காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போடவும். கறிவேப்பிலையையும் போடவும். பின்னர் அத்துடன் மாங்காய்த்துருவல், மஞ்சள் தூள் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை, அடுப்பை சிறு தீயில் வைத்து வதக்கவும். கடைசியில் உப்பு போட்டுக் கிளறி விட்டு, சாதத்தைச் சேர்த்து நன்றாகக் கிளறி எடுக்கவும்.
பின்குறிப்பு: மாங்காயை துருவி சேர்ப்பதற்குப் பதிலாக, அரைத்தும் சேர்க்கலாம்.
4 கருத்துகள்:
மாங்காய் சாதம் நன்றாக இருக்கிறது.
நான் மல்லி, வெந்தயம்,மிளகாய், பெருங்காயம் வறுத்து பொடி செய்து போட்டு மாங்காய் சாதம் செய்வேன்.
நீங்கள் செய்வது போல் செய்துப் பார்க்கிறேன் எளிதாக இருக்கிறது.
கோமதி அரசு,
தாங்கள் கூறியுள்ளது போல் பொடி செய்து போட்டால், இன்னும் சுவையாக இருக்கும். மேற்கண்ட முறையில் செய்யும் பொழுது காரம் சற்று குறைவாகவும், மாங்காய் வாசனை தூக்கலாகவும் இருக்கும். செய்து பார்த்து விட்டு தங்கள் கருத்தைக் கூறவும்.
செய்து சாப்பிட்டு விட்டு சொல்கிறேன் ..... நன்றி சகோதரி !
நான் செய்து பார்த்தேன்.. ரொம்ப நல்லா வந்தது..
கருத்துரையிடுக