தஞ்சை, மற்றும் கும்பகோணம் பகுதியில் பிரசித்தமான கடப்பா (பெயர் காரணம் தெரியவில்லை)அப்பகுதியிலுள்ள பெரும்பாலான ஓட்டல்களில் கிடைக்கும். திருமண விருந்துகளின் போதும் பரிமாறப்படும். இட்லி மற்றும் தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையாயிருக்கும்.
தேவையானப்பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 1
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டுப்பற்கள் - 4
கிராம்பு - 2
பட்டை - 1 துண்டு
சோம்பு - 2 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
பட்டை இலை - 2
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 4 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து உதிர்த்து கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.
பச்சை மிளகாய், சோம்பு, இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை, பொட்டுகடலை, தேங்காய் ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் ஏலக்காய், பட்டை இலையைப் போடவும். பட்டை இலை சற்று வறுபட்டதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும், உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கைப் போட்டு 2 அல்லது 3 நிமிடங்கள் வரை கிளறவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைப் போட்டு நன்றாகக் கிளறி விடவும். அத்துடன் உருளைக்கிழங்கு மூழ்கும் அளவிற்கு தேவையான தண்ணீரைச் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, சற்று சேர்ந்தால் போல் வந்ததும் இறக்கி விடவும்.
குறிப்பு:
பொட்டுக்கடலைக்குப்பதில், சிறிது கடலைமாவை உபயோகித்தும் இதைச் செய்யலாம்.
சிலர் இதில் வேகவைத்த பயத்தம் பருப்பையும் சேர்ப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக