• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

உரப்படை


தேவையானப்பொருட்கள்:

புழுங்கலரிசி - 2 கப்
பச்சை அரிசி - 1/4 கப்
துவரம்பருப்பு - 1 கப்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
வெங்காயம் - 1
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணை - தேவையான அளவு

செய்முறை:

அரிசி, பருப்பு இரண்டையும் தண்ணீரில் குறைந்தது நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.

ஊறியபின்னர், நன்றாகக் கழுவி, தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும். தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை ஆகியவற்றையும் மாவில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தேவைப்பட்டால், சிறிது தண்ணீரைச் சேர்த்து, தோசை மாவை விட சற்று கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். உப்பு சரி பார்த்து, தேவையானால் இன்னும் சிறிது உப்பைச் சேர்க்கலாம்.

தோசைக்கல்லை காயவைத்து, சூடானதும், எண்ணைத் தடவி ஒரு பெரிய குழிக்கரண்டி மாவை நடுவில் ஊற்றி பரப்பி விடவும். அடையைச் சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு, மறு புறமும் சிவக்க வெந்ததும் கல்லிலிருந்து எடுத்து வைக்கவும்.

இதை அப்படியே சாப்பிடலாம். அல்லது அவியல், வெல்லம், வெண்ணை ஆகியவற்றுடனும் பரிமாறலாம்.

குறிப்பு: இந்த அடையை, வெங்காயம், தேங்காய் இல்லாமலும் செய்யலாம். மசாலா வாசனைப்பிடித்தவர்கள் ஒரு டீஸ்பூன் சோம்பை மாவு அரைக்கும் பொழுது சேர்த்து அரைத்தால் வாசனையாக இருக்கும். மிளகாயை, அவரவர் தேவைக்கேற்றவாறு, கூட்டியோ, குறைத்தோ சேர்க்கவும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...