- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
நெல்லிக்காய் உடனடி ஊறுகாய்
தேவையானப்பொருட்கள்:
நெல்லிக்காய் - 5
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணை = 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் முழு நெல்லிக்காயையும், மஞ்சள் தூள், சிறிது உப்பு ஆகியவற்றையும் போட்டு, 3 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும்.
சற்று நேரம் கழித்து, நெல்லிக்காயை நீரிலிருந்து எடுத்து வைக்கவும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினாலே, நெல்லிக்காய் சிறு துண்டுகளாக வந்து விடும். இல்லையென்றால், கத்தியால் நீள துண்டுகளாக்கி, நடுவிலிருக்கும் கொட்டையை நீக்கி விடவும்.
நெல்லிக்காய் துண்டுகளின் மீது, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றைத்தூவி நன்றாக பிசறி விடவும்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் வெந்தயத்தைப் போட்டு இலேசாக வறுத்து எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மீதி எண்ணையை விட்டு காய்ந்ததும், கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், பிசறி வைத்துள்ள நெல்லிக்காயைப் போட்டு வதக்கவும். ஒரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர், வெந்தயப் பொடியைத்தூவி நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.
இது 2 அல்லது 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
உங்கள் பதிவைப் பார்க்கும்போது நினைவில் வந்த மற்றோர் பதிவு.
ஒரு வீடியோப்பதிவு.
How to make fresh Mango Pickle?
மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?
வாழ்க வளமுடன்
நன்றி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தாங்கள் கூறியிருந்த மாங்காய் ஊறுகாயை, வெந்தய மாங்காய் என்று அழைப்போம். தஞ்சையில் ஏறக்குறைய எல்லோர் வீட்டிலும் இந்த முறைப்படிதான் செய்வார்கள். மாங்காய், நெல்லிக்காய் மட்டுமல்ல, எலுமிச்சை, நார்த்தங்காய் போன்றவற்றிலும் இப்படித்தான் செய்வார்கள்.
இதே நெல்லிக்காயை மைக்கிரோ வேவ் அவனிலும் வேக வைக்கலாம் .சுலபம் .
வருகைக்கு மிக்க நன்றி பூங்குழலி அவர்களே. உண்மை. மைக்ரோவேவ் அவனில் செய்வது சுலபம் மட்டுமல்ல. சத்துக்களும் அப்படியே இருக்கும். திட்டமாக தண்ணீரைச் சேர்த்து வேகவைத்தால், காயும் நிறம் மங்காமல் வெந்து விடும். நீரும் சுண்டி வடிகட்டத் தேவையில்லை.
கருத்துரையிடுக