
பால் கொழுக்கட்டை ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு விதமாக செய்யப்படுகிறது. கீழ்கண்ட முறை, தஞ்சாவூர் மாவட்டத்தில் செய்யப்படுவதாகும். மாலை வேளையில், சுடச்சுட வாழை இலையில் பரிமாறுவார்கள்.
தேவையானப்பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
வெல்லம் பொடித்தது - 1/2 கப்
பால் - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
ஒரு வெறும் வாணலியில் அரிசி மாவைப்போட்டு, தொட்டால் சுடும் வரை வறுக்கவும்.
2 கப் தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்து, அரிசி மாவில் ஊற்றி, ஒரு கரண்டி காம்பால் நன்றாகக் கிளறவும். மாவு சற்று ஆறியதும், கையால் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி, 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். முறுக்கு அச்சில் மாவைப் போட்டு கொதிக்கும் நீரில் பிழிந்து விடவும். வேகும் வரை கிளற வேண்டாம். 3 அல்லது 4 நிமிடங்கள் வேக விட்டு இலேசாக திருப்பி விடவும். பின்னர் அதில் மேலும் ஒரு அச்சு மாவை எடுத்து பிழியவும். இதுவும் வேகும் வரை பொறுத்திருந்து கிளறி விடவும். இப்படியே எல்லா மாவையும் பிழிந்து வேக விடவும். பின்னர் அதில் பாலை ஊற்றி ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லத்தையும், 1/4 கப் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அதை எடுத்து வடிகட்டி, கொதிக்கும் கொழுக்கட்டையில் ஊற்றிக் கிளறவும். அத்துடன் தேங்காய்த்துருவல், ஏலப்பொடிச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். ஆறினால் சற்று கெட்டியாகி விடும்.
சூடாக வாழை இலையில் ஊற்றி சாப்பிடுவதே தனிச்சுவைதான்.
குறிப்பு: வெல்லத்தை அதன் சுவைக்கேற்ப சற்று கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கலாம். சாதரணப் பாலிற்குப்பதில், தேங்காய்பால் சேர்த்தும் செய்யலாம்.
சில வீடுகளில், அரிசியை ஊறவைத்து கெட்டியாக அரைத்தெடுத்து, அதை பிழிந்தும் இந்தக் கொழுக்கட்டையைச் செய்வார்கள்.
1 கருத்து:
Thank you for the receipe. Please post them in www.newspaanai.com and invite more readers to your blog. It is a tamil social bookmarking website and it has a separate receipecorner for receipes. For easy posting of your articles with once click of a button please visit http://www.newspaanai.com/easylink.php
கருத்துரையிடுக