- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
வெண்டைக்காய் மசாலா அடைத்த கறி
தேவையானப்பொருட்கள்:
வெண்டைக்காய் - 10
பெரிய வெங்காயம் - 1
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
வெண்டைக்காயைக் கழுவித் துடைத்து, நீளவாக்கில் இலேசாகக் கீறிக் கொள்ளவும். காய் உடையக்கூடாது. காம்பு, மற்றும் முனையை அப்படியே வைத்து நடுவில் கீறினால் போதும். வெண்டைக்காய் மிக நீளமாய் இருந்தால், குறுக்கே இரண்டாக வெட்டி, ஒவ்வொருத் துண்டையும் இலேசாகக் கீறிக்கொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் வேர்க்கடலையைப் போட்டு, சற்று சூடாகும் வரை வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் தேங்காய்த்துருவலையையும் போட்டு சற்று வறுத்தெடுக்கவும். சற்று ஆறியபின், கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் சீரகம் சேர்க்கவும். பின்னர் அதில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். இலேசாக வதங்கினால் போதும். அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் சிறிது வதக்கவும். கடைசியில் தேங்காய், வேர்க்கடலைப் பொடியைத்தூவிக் கிளறி, இறக்கி ஆறவைக்கவும்.
கிளறி வைத்துள்ள மசாலாப்பொடியை ஒவ்வொரு வெண்டைக்காய் துண்டையும் இலேசாகப் பிளந்து, அதனுள் திணிக்கவும். மசாலாப் பொடி மீந்து விட்டால், அதை தனியாக வைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பிலேற்றி, சிறிது எண்ணை விட்டு தேய்க்கவும். அதன் மேல் வெண்டைக்காய் துண்டுகளை, ஒன்றின் மேல் ஒன்று படாமல் தனித்தனியாக அடுக்கி வைக்கவும். மீதமுள்ள மசாலாப்பொடியை, அடுக்கி வைத்துள்ள காயின் மேல் பரவலாகத் தூவவும். ஒரு மூடி போட்டு காயை மூடி வைக்கவும். (இட்லிபானை மூடி பொருத்தமாக இருக்கும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். 5 நிமிடங்கள் கழித்து, மூடியைத் திறந்து, தோசைத்திருப்பியால், ஒவ்வொரு துண்டையும் திருப்பிப்போட்டு, மீண்டும் மூடி வைத்து வேக விடவும். காய் நிறம்மாறி வேகும் வரை, இவ்வாறே திருப்பி திருப்பி போடவும். காய் நிறம்மாறி வெந்ததும், மூடியை எடுத்து விட்டு, திறந்து வைத்து, காய் நன்றாக சிவக்கும் வரை திருப்பிப் போட்டு வேக விடவும்.
குறிப்பு: கரம் மசாலா வாசனைப் பிடிக்காதவர்கள், அதைத் தவிர்த்து விடலாம். அதற்குப் பதில் பெருங்காய்த்தூளைச் சேர்க்கலாம். வேர்க்கடலைக்குப் பதில், எள்ளை உபயோகித்தும் மசாலாப்பொடி செய்யலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக