• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

கோதுமை ரவா அடை


தேவையானப்பொருட்கள்:

கோதுமை ரவா - 1 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணை - தேவையான அளவு

செய்முறை:

பருப்புகள் அனைத்தையும் தண்ணீரில் 2 முதல் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

கோதுமை ரவாவை, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.

பருப்புகள் ஊறியபின்னர், நன்றாகக் கழுவி, தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவுடன், ஊற வைத்துள்ள கோதுமை ரவாவைச் சேர்த்து கலக்கவும்.

கறிவேப்பிலை, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும். தேவைப்பட்டால், சிறிது தண்ணீரைச் சேர்த்து, தோசை மாவை விட சற்று கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். உப்பு சரி பார்த்து, தேவையானால் இன்னும் சிறிது உப்பைச் சேர்க்கலாம்.

தோசைக்கல்லை காயவைத்து, சூடானதும், எண்ணைத் தடவி ஒரு பெரிய குழிக்கரண்டி மாவை நடுவில் ஊற்றி பரப்பி விடவும். அடையைச் சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு, மறு புறமும் சிவக்க வெந்ததும் கல்லிலிருந்து எடுத்து வைக்கவும்.

விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

5 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஃபோட்டோவைப்பார்த்தாலே செமயா இருக்கே.. இன்னைக்கே செஞ்சுட வேண்டியதுதான்.. அட சே... செய்ய சொல்லிட வேண்டியதுதான்..

கமலா சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி செந்தில்குமார். செய்யச் சொல்லி, சாப்பிட்டுப் பார்த்து விட்டு, தங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்

Kavitha சொன்னது…

கமலா அவர்களே , உங்கள் குறிப்புகள் மிகவும் அருமை
.. ஒரு கப் என்பது கிராம் கணக்கில் எழுதினால் மிகவும் பயனுள்ளதாக
இருக்கும் .. தங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன்..
மிக்க நன்றி . .

கமலா சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி கவிதா.

ஒரு கப் என்பது சுமார் 200 கிராம் இருக்கும். நாம் சமைக்கும் பொழுது, ஆழாக்கு, டம்ளர், கப், ஸ்பூன் போன்றவற்றை உபயோகித்துத்தான் அளக்கிறோம். அதனால்தான் கிராம் கணக்கில் குறிப்பிடவில்லை. மேலும் கிராம் கணக்கில் நம்மால் வீட்டில் அளவிடவும் முடியாது. நடுத்தர அளவுள்ள டம்ளர், டீ கப், ஆழாக்கு இவையனைத்தும் கிட்டதட்ட 200 கிராம், அதாவது ஒரு கப் என்ற அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

Kavitha சொன்னது…

மிக்க நன்றி . .

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...