- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
ஓட்ஸ் இட்லி
தேவையானப்பொருட்கள்:
ஓட்ஸ் - ஒன்றரை கப்
ரவா - 1 கப்
தயிர் - 2 கப்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
"ஈனோ" ஃபுரூட் சால்ட் - 1/2 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணை - 4 அல்லது 5 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகு, சீரகம் - கொரகொரப்பாக பொடித்தது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
இஞ்சி - ஒரு சிறு துண்டு
முந்திரி பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் எண்ணை விடவும். எண்ணை காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகப் பொடி, பச்சை மிளகாய், இஞ்சி (பொடியாக நறுக்கியது) சேர்த்து பருப்புகள் சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அதில் ஓட்ஸ் மற்றும் ரவையைக் கொட்டிக் கிளறி விட்டு, சற்று வாசனை வரும் வரை வறுக்கவும். (நீண்ட நேரம் வறுக்க தேவையில்லை).
வறுத்த ஓட்ஸ்-ரவாக் கலவையை கீழே இறக்கி வைத்து ஆற விடவும். ஆறியவுடன் அதில் உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அதில் தயிரை நன்றாகக் கடைந்து சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற விடவும். பின்னர் அதில் ஃபுரூட் சால்ட்டைப் போட்டு, அதன் மேல் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரை ஊற்றவும். ஃபூருட் சால்ட் பொங்கி நுரைத்து வரும். மாவுடன் நன்றாகக் கலந்துக் கொள்ளவும். தேவைப்பட்டால், சிறிது நீரையும் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.
இட்லி பானையில் தண்ணீரைக் கொதிக்க விட்டு, அதன் பின், இட்லி தட்டில் எண்ணை தடவி அதில் மாவை ஊற்றி, இட்லி பானையில் வைத்து 10 முதல் 12 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுக்கவும்.
மேற்கண்ட அளவிற்கு, 12 இட்லி வரை கிடைக்கும்.
கவனிக்க: இட்லியை ஊற்றும் முன், இட்லி தட்டில் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய தக்காளியைச் சிறிது தூவி, அதன் மேல் மாவை ஊற்றினால், வண்ணமயமான இட்லி கிடைக்கும். மாவிலேயே பொடியாக நறுக்கிய காரட், காலிஃபிளவ்ர், பச்சைப்பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்தும் செய்யலாம்.
"குயிக் குக்கிங் ஓட்ஸ்" என்று கடைகளில் கிடைக்கும் ஓட்ஸைப் பயன்படுத்தினால் அப்படியே சேர்க்கலாம். முழு ஓட்ஸ் என்றால், மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக ரவா பதத்திற்கு உடைத்து சேர்க்கவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
ருசியான உணவு .
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com
கருத்துரையிடுக