- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
மிளகு அடை
தேவையானப்பொருட்கள்:
புழுங்கலரிசி - 1 கப்
பச்சரிசி - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
தேங்காய் பொடியாக நறுக்கியது - 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - தேவையான அளவு
செய்முறை:
அரிசியையும், பருப்பையும் 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசி பருப்பை நன்றாகக் கழுவி, தண்ணீரை வடித்து விட்டு, மிக்ஸியில் போட்டு, அத்துடன் மிளகு, சீரகம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். மிக்ஸியிலிருந்து எடுக்குமுன், தேங்காய்த் துருவலைப் போட்டு ஓரிரண்டு சுற்றுகள் ஓடவிட்டு எடுக்கவும்.
தோசைக்கல்லை காய விட்டு, சிறிது எண்ணை விட்டு, ஒரு கை மாவை எடுத்து அடையாக தட்டவும். அதன் மேல் சிறிது தேங்காய்த் துண்டுகளைத் தூவி விடவும். அடையைச் சுற்றி சிறிது எண்ணை விட்டு சிவக்க வேக விடவும். ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு, மறு புறமும் சிவக்க வெந்ததும் எடுக்கவும்.
இந்த முறையில் செய்யப்படும் அடை, சற்று அழுத்தமாக இருக்கும். ஆனால் சுவை நன்றாகவே இருக்கும். மிருதுவான அடை வேண்டுமென்றால், மாவில் சிறிது தண்ணீரைச் சேர்த்து, அடை மாவு பதத்திற்கு கரைத்து, கரண்டியால் எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி, வட்டமாக பரப்பி, அதன் மேல் தேங்காய்த்துண்டுகளைத் தூவி சுட்டெடுக்கலாம்.
வெல்லம் மற்றும் வெண்ணையுடன் பரிமாறவும். காரம் தேவையென்றால், இட்லி மிளகாய் பொடியுடனும் சாப்பிடலாம்.
இந்த அடை கார்த்திகை பண்டிகையின் பொழுது பெரும்பாலானோர் வீடுகளில் செய்யப்படுவதால், இதை "கார்த்திகை அடை" என்றும் அழைப்பார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 கருத்துகள்:
தேங்காய் இல்லாமல் செய்தால் எப்படியிருக்கும் என என் துணைவி கேட்க சொன்னார்கள்... (சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு) பகிர்வுக்கு நன்றி சகோதரி!
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."
தேங்காய் சேர்ப்பது கூடுதல் சுவைக்காகத்தான். மேலும் தேங்காய் காரத்தை சற்று குறைக்கும். தேங்காய் இல்லாமலும் செய்யலாம். சுவை நன்றாகவே இருக்கும்.
அட!
கருத்துரையிடுக