- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
தவலை அடை
தேவையானப்பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 4
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
எண்ணை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகக் கலந்துக் கழுவி, ஒரு துணியில் பரப்பி 15 நிமிடங்கள் வரை நிழலில் காய விடவும். பின் அதை ஒரு மிக்ஸியில் போட்டு அத்துடன் மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் 1 அல்லது 2 டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் உளுத்தம் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். அத்துடன் 2 + 1/4 கப் தண்ணீர் விட்டு, உப்பையும் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்து கொண்டு, அதில் அரிசி மாவைக் கொட்டிக் கிளறி விடவும். சற்று நேரத்தில் மாவு பந்து போல் உருண்டு வரும். அப்பொழுது அதில் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். மூடி போட்டு 10 நிமிடங்கள் வைத்திருந்து, பின்னர் சற்று ஆறியதும் நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பிலேற்றி, சிறிது எண்ணை தடவி விடவும். எலுமிச்சம் பழ அளவிற்கு மாவை எடுத்து உருட்டி, வடை போல் தட்டி, 5 அல்லது 6 அடையை தோசைக்கல்லில் போட்டு, அதைச் சுற்றி சிறிது எண்ணையை விட்டு, இரு புறமும் சிவக்க வேக விட்டு எடுக்கவும். எல்லா மாவையும் இப்படியே சிறு அடைகளாகத் தட்டி, சுட்டெடுக்கவும்.
இது ஒரு சுவையான மாலை நேர சிற்றுண்டி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
படத்துடன் விளக்கம் அருமை...
வீட்டில் குறித்துக் கொண்டார்கள்...
மிக்க நன்றி...
தவலை அடை ரொம்ப நல்லா இருக்கு...இப்பவே சாப்பிட வேண்டும் என்ற ஆசையை தூண்டுகிறது...
நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
கருத்துரையிடுக