• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

கருணைக்கிழங்கு குழம்பு


தேவையானப்பொருட்கள்:

கருணைக்கிழங்கு - 100 கிராம்
பூண்டு பற்கள் - 10
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 1
சாம்பார் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு
நல்லெண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

புளியை தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து 2 முதல் 3 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கருணைக்கிழங்கை கழுவி, தோலை சீவி விட்டு, சிறு சதுரத் துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

பூண்டு, வெங்காயம் ஆகியவற்றின் தோலை உரித்து வைக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுக்கவும்.   பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து சில வினாடிகள் வதக்கவும்.  பின்னர் தக்காளியைச் சேர்த்து சற்று வதக்கிய பின் அதில் கருணைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறி விடவும்.  அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறவும்.  பின்னர் அதில் புளித்தண்ணீர், உப்பு சேர்த்துக் கலக்கி, மிதமான தீயில், கிழங்கு வேகும் வரை மூடி போட்டு வேக விடவும். குழம்பு நன்றாகக் கொதித்து, கிழங்கும் வெந்தவுடன் இறக்கி வைக்கவும்.

சூடான சாதத்தில் விட்டு பிசைந்து, சுட்ட அப்பளத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

பின்குறிப்பு:  இந்த குழம்பிற்கு சாதாரணமாக "பிடி கருணை" என்றழைக்கப்படும் சிறிய வகை கிழங்கைத்தான் உபயோகிப்பார்கள். ஆனால் இது எல்லா கடைகளில் கிடைக்காது.  அதனால் "காரா கருணை" அல்லது "சேனைக்கிழங்கு" என்றழைக்கப்படும் பெரிய வகை கிழங்கில் இந்தக் குழம்பை செய்தேன்.  சுவை நன்றாகவே இருந்தது.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விளக்கம் மிகவும் அருமை...

வீட்டில் செய்து பார்க்க வேண்டும்...

நன்றி..

பூங்குழலி சொன்னது…

சின்ன வெங்காயத்தை லேசாக தட்டி கூட போடலாம் ,சுவையாக இருக்கும்

கமலா சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் - வருகைக்கு நன்றி.

பூங்குழலி - உண்மை. வெங்காயத்தையும், பூண்டையும் தட்டிப் போட்டுத்தான் செட்டிநாட்டுப் பக்கம் செய்வார்கள். சிலர் அரைத்துப் போட்டும் செய்வார்கள். குழம்பில் வெந்த வெங்காயம், பூண்டு சாப்பிட சுவையாக இருக்கும். அதனால் நான் முழுதாகப் போட்டு செய்துள்ளேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...