• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பகோடா குருமா


தேவையானப்பொருட்கள்:

பகோடாவிற்கு:

கடலைப்பருப்பு - 1 கப்
பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 1/2 கப்
பச்சை மிளகாய் - 3
சோம்பு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

குருமாவிற்கு:

பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு பற்கள் - 4 அல்லது 5
கரம் மசாலா பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கடலைப் பருப்பை 2 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். பின்னர் ப்ருப்பை நன்றாகக் கழுவி நீரை வடித்து விட்டு, அத்துடன் பச்சை மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து சற்று கொர கொரப்பாக அரைத்தெடுக்கவும். அத்துடன் பொடியான நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பிசையவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், மாவை பகோடாபோல் கிள்ளிப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குருமாவிற்கு - ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி சிறிது எண்ணையில் வதக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயையும் எண்ணையில் வதக்கிக் கொள்ளவும். தேங்காய், சோம்பு, இஞ்சி, பூண்டு, வதக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றாகப் போட்டு நன்றாக அரைத்தெடுக்கவும்.

ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும், ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கவும். பின் அதில் ஒரு தக்காளியைப் பொடியாக நறுக்கிப் போட்டு அத்துடன் மிளகாய் பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலா பொடி, உப்பு போட்டு வதக்கி, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைப் போட்டு மீண்டும் வதக்கவும். பின்னர் அதில் ஒரு கப் தண்ணீர் விட்டுக் கலக்கவும். குருமா சற்று தளர இருக்க வேண்டும். தேவைப்பட்டால் மேலும் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கலாம். பகோடா சேர்த்த பின்பு குருமா கெட்டியாகி விடும் எனவே குருமாவை கொதிக்க வைக்கும் பொழுது நீர்க்க இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். மூடி வைத்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். இறக்கி வைத்து அதில் பொரித்த பகோடாவைப் போட்டுக் கிளறி விடவும்.


பூரி, சப்பாத்தி, புலாவ் போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு: பகோடாவை கடலை மாவிலும் செய்யலாம். ஒரு கப் கடலை மாவு, ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு, ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது நீரைத்தெளித்து பிசைந்து பகோடா போல் எண்ணையில் உதிர்த்து விட்டு பொரித்தெடுத்து குருமாவில் போடவும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...