• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

ரவா பொங்கல்


தேவையானப்பொருட்கள்:

ரவா - 1 கப்
பயத்தம் பருப்பு - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி - ஒரு சிறு துண்டு
முந்திரிப்பருப்பு - சிறிது
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெறும் வாணலியில் ரவாவைப் போட்டு சற்று வறுத்து எடுக்கவும். (தொட்டால் சுடும் அளவிற்கு வறுத்தால் போதும். சிவக்க விடவேண்டாம்). அதே வாணலியில் பயத்தம் பருப்பையும் போட்டு இலேசாக வறுத்தெடுக்கவும்.

இஞ்சியை, தோலை சீவிவிட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பயத்தம் பருப்பில் தேவையான அளவு (சுமார் 2 கப்) நீரைச் சேர்த்து மலர வேக வைத்துக் கொள்ளவும். (குக்கரில் போட்டும் 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கலாம்).

ஒரு அடி கனமான பாத்திரத்திலோ அல்லது வாணலியிலோ 2 கப் நீரை விட்டு கொதிக்க விடவும். நீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் நறுக்கிய இஞ்சி, உப்பு இரண்டையும் சேர்த்து, அடுப்பைத் தணித்துக் கொள்ளவும். ரவாவை மெதுவாக கொதிக்கும் நீரில் போட்டுக் கிளறவும். ரவா வெந்து, கெட்டியானதும், அதில் வேகவைத்துள்ள பருப்பை மசித்துச் சேர்க்கவும். ஓரிரு டீஸ்பூன் நெய்யைச் சேர்த்துக் கிளறவும்.

மிளகையும், சீரகத்தையும் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி மீதமுள்ள நெய்யை ஊற்றவும். நெய் சூடானதும் அதில் முந்திரிப்பருப்பு, பெருங்காயத்தூள், கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடித்து வைத்துள்ள மிளகு, சீரகம் ஆகியவற்றைப் போட்டு தாளித்து, இந்த தாளிப்பை ரவா-பருப்பு கலவையில் கொட்டிக் கிளறவும்.

சுவையான ரவா பொங்கல் தயார்.

தேங்காய் சட்னி அல்லது கொஸ்துடன் பரிமாறலாம்.

மேற்கண்ட அளவிற்கு 2 பேர் சாப்பிடலாம்

1 கருத்து:

Ponnammal சொன்னது…

Corriandar Leaves Chutney is nice
for breakfast dishes

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...