• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

சுண்டைக்காய் மசியல்


தேவையானப்பொருட்கள்:

சுண்டைக்காய் - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
தக்காளி - 1
புளி - ஒரு நெல்லிக்காயளவு
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை, நீள வாக்கில் கீறிக் கொள்ளவும். சுண்டைக்காயை நறுக்கத் தேவையில்லை. அப்படியே முழுதாக உபயோகிக்கலாம். ஆனால் பூச்சியில்லாமல் பார்த்து பொறுக்கி எடுக்கவும்.

புளியை சிறிது தண்ணீரில் ஊற வைத்து, கெட்டியாக புளிச்சாற்றை எடுக்கவும்.

குக்கரில் துவரம் பருப்பைப் போட்டு, தேவையான தண்ணீரைச் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். குக்கர் சற்று ஆறியவுடன், மூடியைத் திறந்து வெந்த பருப்புடன், சுண்டைக்காய், தக்காளி, பச்சை மிளகாய், புளிச்சாறு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயதூள், உப்பு மற்றும் தேவையான தண்ணீர்ச் சேர்த்து, தளர கிளறி விடவும். குக்கரை மூடி, மீண்டும் மூன்று விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

சற்று ஆறியவுடன், குக்கரைத் திறந்து, கீரை கடையும் மத்தால், நன்றாகக் கடையவும். மத்து இல்லையென்றால், "பிளண்டர்" அல்லது மிக்ஸியில், ஓரிரண்டு சுற்று ஓட விட்டு எடுக்கவும் மிக்ஸியில் போடுவதென்றால், ஆறியபின் போடவும். இல்லையெனில், மிகஸியின் மூடி கழன்று வெளியே சிதறி விடும்.

ஒரு சிறு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, மிளகாய் தாளித்து மசியலில் கொட்டிக் கிளறவும்.

இதை சூடான சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம் அல்லது சாதம், இட்லி , தோசை போன்றவற்றுடன் தொட்டுக் கொள்ளவும் நன்றாயிருக்கும்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

மிகவும் அருமையாக இருந்தது சூடான சாதத்தில்
நெய் போட்டு சாப்பிட்டால் இன்னும் சுவை ஜோர்
நன்றியுடன் லக்ஷ்மி நிவேதா சேலம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...