• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

இஞ்சி பச்சடி

தேவையானப்பொருட்கள்:

இஞ்சி - 2 அல்லது 3 பெரிய துண்டுகள்
புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
 
வறுத்தரைக்க:

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3 முதல் 4 வரை
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
எள் - 1/2 டீஸ்பூன்
 
தாளிக்க:

நல்லெண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
வெல்லம் - ஒரு சிறு துண்டு
 
செய்முறை:

இஞ்சியை நன்றாகக் கழுவி, தோலை சீவி விட்டு துருவிக் கொள்ளவும். அல்லது மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். துருவிய இஞ்சி 3 டேபிள்ஸ்பூன் அளவிற்கு இருக்க வேண்டும்.

புளியை ஊறவைத்து, தேவையான தண்ணீரைச் சேர்த்துக் கரைத்து இரண்டு அல்லது இரண்டரை கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 
ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணை விட்டு, காய்ந்ததும் அதில் இஞ்சித்துருவலைப் போட்டு வதக்கவும்.  இஞ்சி சிவக்க வதங்கியதும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
 
அதே வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், எள் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, ஆறியதும், மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
 
ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி அதில் புளித்தண்ணீரை ஊற்றவும்.  அதில் மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும்.  புளித்தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பைத் தணித்து விட்டு, அரைத்து வைத்துள்ளப் பொடியைத் தூவவும்.  (சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றினால்  பொடி கெட்டியாவதை தடுக்கலாம்). மீண்டும் ஓரிரு வினாடிகள் கொதித்ததும், அதில் வதக்கி வைத்துள்ள இஞ்சித்துருவல், வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, இன்னும் சில வினாடிகள் அடுப்பில் வைத்திருந்து இறக்கி வைக்கவும்.

சாதம், சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம். பிரட்டுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

2 கருத்துகள்:

கோமதி அரசு சொன்னது…

இஞ்சி பச்சடி மிக நன்றாக இருக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சூப்பர் ! ஸ்... ஸ்....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...