• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பப்பாளி ஆரஞ்சு அல்வா


தேவையானப்பொருட்கள்:

பப்பாளி (நன்றாகப் பழுத்தது) - பாதி
ஆரஞ்சுப் பழம் - 2
சர்க்கரை - 2 கப் அல்லது தேவைக்கேற்றவாறு
நெய் - 2 முதல் 3 டீஸ்பூன் வரை
ஏலக்காய்த்தூள் - சிறிது
முந்திரிப்பருப்பு - 10

செய்முறை:

பப்பாளியின் தோல் மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஆரஞ்சுப்பழத்திலிருந்து சாற்றைப் பிழிந்தெடுத்துக் கொள்ளவும்.

பப்பாளிப் பழத்துண்டுகளை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு கப்பால் அளந்து, அடி கனமான ஒரு வாணலியில் போடவும். அத்துடன் அதற்கு சமமாக அல்லது முக்கால் பங்கு சர்க்கரையைச் சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து கெட்டியாகும் வரைக் கிளறவும். பின்னர் ஆரஞ்சுச் சாற்றைச் சிறிது சிறிதாக விட்டுக் கிளறவும். அல்வா கெட்டியாகி வரும் பொழுது நெய்யை விட்டுக் கிளறவும். கடைசியில் முந்திரிப்பருப்பு (சிறிது நெய்யில் வறுத்து சேர்க்கவும்) ஏலக்காய்த்தூளை ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

கவனிக்க: இதை மைக்ரோவேவ் அவனிலும் செய்யலாம். மைக்ரோவேவ் பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு அவனில் வைத்து, அவ்வப் பொழுது வெளியே எடுத்துக் கிளறி , கெட்டியாகும் வரை வேக விட்டு எடுத்து, கடைசியில் நெய் சேர்த்துக் கிளறவும்.

காய்கறி சொதி


"சொதி" அல்லது "சொதி குழம்பு" என்றழைக்கப்படும் இநத "தேங்காய்ப்பால் குழம்பு" திருநெல்வேலி சைவ வீடுகளில் பிரபலமானது. விருந்துகளில் இது நிச்சயமாக இடம் பெறும். குறிப்பாக, திருமணமாகி மாப்பிள்ளை மறு வீடு வரும் பொழுது, இந்தக் குழம்பு கண்டிப்பாக இருக்கும்.

இதில் முருங்கைக்காய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் போன்ற பலவிதமான காய்கறிகளைச் சேர்த்துச் செய்வார்கள். செய்யும் முறை வீட்டிற்கு வீடு சற்று மாறு படும். அடிப்படையில், காய்கறிகளை தேங்காய்ப்பாலில் வேக வைத்து, பருப்பு சேர்த்து செய்யும் குழம்பு இது.

என்னுடைய செய்முறை:

தேவையானப்பொருட்கள்:

தேங்காய் (பெரியது) - 1
உருளைக்கிழங்கு - 2
கேரட் - 1
பீன்ஸ் - 5 அல்லது 6
சாம்பார் வெங்காயம் - 10
பூண்டுப்பற்கள் - 10
எலுமிச்சம் பழச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி - 2 அங்குல நீளத்துண்டு
பச்சை மிளகாய் (சிறியது) - 4 முதல் 5 வரை
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
பச்சை அல்லது கறுப்பு திராட்சை - ஒரு கைப்பிடி (விருப்பமானால்)

செய்முறை:

காய்கறிகளை நன்றாகக் கழுவிக் கொள்ளவும். உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டின் தோலை சீவி விட்டு நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பீன்ஸை 2 அங்குல துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

வெங்காயம் மற்றும் பூண்டின் தோலை உரித்து விட்டு, முழுதாகவே வைத்துக் கொள்ளவும். இஞ்சியின் தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்து, தேவையான தண்ணீரை விட்டு வேக வைத்தெடுக்கவும்.

தேங்காயைத்துருவி கெட்டியான பாலை எடுக்கவும். ஒரு கப் திக்கான பால் கிடைக்கும். அதைத் தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் சிறிது தண்ணீரை தேங்காயுடன் சேர்த்து அரைத்து, இரண்டாம் பாலையும் பிழிந்து எடுக்கவும். மேலும் சிறிது தண்ணீரைச் சேர்த்து மூன்றாம் பாலையும் பிழிந்தெடுக்கவும். இரண்டாவது, மூன்றாவதாக எடுத்தப்பாலை ஒன்றாகச் சேர்க்கவும். மூன்று கப் அளவிற்கு இந்தப் பால் இருக்கும். இல்லையென்றால் சிறிது நீரைச் சேர்த்து 3 கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு பச்சை மிளகாயையும், இஞ்சித்துண்டுகளையும் வதக்கி எடுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அடி கனமான வாணலி அல்லது பாத்திரத்தை அடுப்பிலேற்றி எண்ணை விடவும். எண்ணை சூடானதும் வெங்காயத்தைப் போட்டு சில வினாடிகள் வதக்கவும். பூண்டையும் சேர்த்து மேலும் சில வினாடிகள் வதக்கவும். பின்னர் காய்கறிகளைச் சேர்த்து சற்று வதக்கி, அத்துடன் இரண்டாம்/மூன்றாம் முறை எடுத்து வைத்துள்ள தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும். உப்பு, மஞ்சள் தூளைச் சேர்த்துக் கிளறி விட்டு, மிதமான தீயில் வேக விடவும்.

காய்கறிகள் வெந்ததும், அரைத்து வைத்துள்ள மிளகாய்/இஞ்சி விழுதைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் அத்துடன் வேக வைத்துள்ளப் பருப்பையும் சேர்த்துக் கிளறி கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, திக்கான தேங்காய்ப்பாலைச் சேர்த்துக் கிளறி, ஓரிரு நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து விட்டு இறக்கி வைக்கவும்.

5 அல்லது 10 நிமிடங்கள் கழித்து, எலுமிச்சம் பழச்சாற்றைச் சேர்த்துக் கலக்கி விடவும்.

பச்சை திராட்சைப் பழங்களையும் சேர்த்து கிளறி, இஞ்சி துவையல், உருளைக்கிழங்கு சிப்ஸ் அல்லது காரமான உருளைக் கிழங்கு கறியுடன் பரிமாறவும்.

சாதரணமாக இதை சூடான சாதத்துடன் பரிமாறுவார்கள். ஆனால் இடியாப்பம் மற்றும் ஆப்பத்துடன் சேர்த்து சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

கவனிக்க: ஒரு பெரிய தேங்காயில் ஒரு கப் திக்கான பால் கிடைக்கும். காய் சிறியதாக இருந்தால் மேலும் ஒரு மூடி தேங்காயைச் சேர்த்துக் கொள்ளவும். கடைகளில் கிடைக்கும் தேங்காய்ப்பாலையும் உபயோகிக்கலாம். அப்படி செய்யும் பொழுது, ஓரிரு டேபிள்ஸ்பூன் திக்கான பாலில் தேவையான நீரைச் சேர்த்து கலந்து, அதில் காய்களை வேக வைக்கவும்.

காய்கறி கடலைக் கறி


தேவையானப்பொருட்கள்:

பீன்ஸ் - 8 முதல் 10 வரை
கேரட் - 1
காலிஃபிளவ்ர் - பாதி
கொண்டைக்கடலை - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணை - 3 முதல் 4 டீஸ்பூன் வரை
கடுகு - 1/2 டெஅச்போன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த்துருவல் - 1 கப்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கொண்டைக்கடலையை 6 முதல் 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.

காய்கறிகளைக் கழுவி விட்டு, 1" அளவிற்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். காலிஃபிளவரையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஊறவைத்துள்ளக் கடலையை குக்கரில் போட்டு, தேவையான நீரை ஊற்றி 3 முதல் 4 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும்.

தேங்காய்த்துருவலை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, பாலை பிழிந்தெடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கறிவேப்பிலையைப் போட்டு வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், தக்காளியை சேர்க்கவும். அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும், காய்கறிகளைச் சேர்த்துக் கிளறி விடவும். அத்துடன் ஒரு கப் தண்ணீரைச் சேர்த்து, மூடி வைத்து, மிதமான தீயில் வேக விடவும். காய்கறிகள் வெந்ததும், வேக வைத்துள்ளக் கடலையைச் சேர்த்துக் கிளறி கொதிக்க விடவும். நன்றாகக் கொதி வந்ததும், தேங்காய்ப் பாலைச் சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து இறக்கி வைக்கவும்.

புலாவ் மற்றும் சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் பரிமாறலாம்.

காய்கறி கூட்டு


தேவையானப்பொருட்கள்:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1
பறங்கிக்காய் - ஒரு சிறு துண்டு
அவரைக்காய் - 5 அல்லது 6
உருளைக்கிழங்கு - 1
சேனைக்கிழங்கு - ஒரு சிறு துண்டு
வாழைக்காய் - பாதி
பச்சை மொச்சைக் கொட்டை - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
புளி - ஒரு நெல்லிக்காயளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வறுத்தரைக்க:

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை
தனியா - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

புளியை ஊற வைத்து, சாற்றைப் பிழிந்தெடுத்து கொள்ளவும்.

துவரம் பருப்பை குக்கரில் போட்டு வேக வைத்தெடுக்கவும்.

காய்கறிகளை நன்றாகக் கழுவி, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். காய்கறி துண்டுகள், பச்சை மொச்சைக் கொட்டை ஆகியவற்றை, ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து, காய்கறி மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி வேக விடவும்.

இதற்கிடையே, வறுக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு டீஸ்பூன் எண்ணையில் வறுத்தெடுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

காய்கறிகள் வெந்தவுடன் புளிச்சாற்றை ஊற்றி கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன், வேக வைத்துள்ளப் பருப்பைக் கடைந்து சேர்க்கவும். மீண்டும் ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும். மறுபடியும் ஒரு கொதி வந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

திருவாதிரை, பொங்கல் ஆகிய பண்டிகையின் பொழுது இந்தக் கூட்டை செய்வார்கள். இதை "தாளகம்" என்றும் "பொங்கல் கூட்டு" என்றும் அழைப்பார்கள்.

வெண் பொங்கல்


தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1 (விருப்பப்பட்டால்)
முந்திரிப்பருப்பு - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசி, பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவி விட்டு, மூன்று அல்லது மூன்றரைக் கப் தண்ணீரைச் சேர்க்கவும். அத்துடன் இஞ்சியைப் பொடியாகத் துருவிச் சேர்க்கவும். உப்பு, பெருங்காயத்தூளையும் சேர்த்து, குக்கரில் வைத்து 3 முதல் 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும், மூடியைத் திறந்து, ஒரு கரண்டியால் நன்றாக மசித்து விடவும்.

ஒரு சிறு வாணலியில் நெய்யை விட்டு சூடானதும், முந்திரிப் பருப்பு, மிளகு, சீரகம் (இரண்டையும் ஒன்றிரண்டாக பொடித்துப் போடவும்), கறிவேப்பிலை, பச்சை மிளகாய் (இரண்டாகக் கீறிப் போடவும்) சேர்த்து வதக்கி, மசித்து வைத்துள்ளப் பொங்கலில் கொட்டிக் கிளறவும்.

கத்திரிக்காய் கொஸ்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடனும் சேர்த்து சாப்பிடலாம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...