• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

சுண்டைக்காய் பொரிச்சக் குழம்பு


தேவையானப்பொருட்கள்:

சுண்டைக்காய் - 2 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
வெங்காயம் நறுக்கியது - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

சுண்டைக்காயின் காம்பைக் கிள்ளி விட்டு, இரண்டாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

துவரம்பருப்பை, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், தனியா ஆகியவற்றை வறுத்து, ஆறியபின், அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

சுண்டைக்காயைத் தண்ணீரிலிருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு அத்துடன் காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, மிதமான தீயில் வேகவிடவும்.

காய் வெந்த பிறகு, வேக வைத்த பருப்பைச் சேர்த்துக் கிளறி, ஒரு கொதி வரும்வரை மிதமான தீயில் வைக்கவும். பின்னர், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்துக் கலக்கி விட்டு ஓரிரு வினாடிகள் கொதிக்க விடவும்.

கடைசியில், கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பெருங்காயம் ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டவும்.

குறிப்பு: துவரம் பருப்பிற்குப் பதில், பயத்தம்பருப்பையும் இதில் சேர்த்து செய்யலாம்.

6 கருத்துகள்:

ஆ.கோகுலன் சொன்னது…

பொரிச்ச குழம்பு என்று தலைப்பை போட்டு விட்டு கடைசி வரை சுண்டைக்காயை பொரிக்கவே இல்லையே.??!! :-)
யாழ்ப்பாணத்தில் மோரில் ஊறவைத்து வெயிலில் காயவிட்டு வற்றலாக்கி குழம்பு செய்வார்கள். ஆனால் அதில் பருப்பு வகை மிஸ்ஸிங்..
தானியா என்பது என்ன?

பெயரில்லா சொன்னது…

பார்க்க அழகா இருக்கே..
சுண்டைக்காய் கசந்தாலும், உடலுக்கு நல்லம்..

Kamala சொன்னது…

தங்கள் பின்னூட்டத்திற்கு, முதலில் என் நன்றி.

கோகுலன் அவர்களுக்கு, பொரிச்சக் குழம்பென்றால், காயைப் பொரித்து வைக்கும் குழம்பல்ல. புளியில்லாமல், வெந்தக் காயையும் பருப்பையும் சேர்த்து கொதிக்க விட்டு, விருப்பமானால் தேங்காய் சேர்த்து, கடைசியில் கடுகு மற்றும் ஏனைய தாளிப்புப் பொருட்களை எண்ணையில் பொரித்துச் சேர்ப்பதுதான் பொரிச்சக் குழம்பு. தஞ்சை மாவட்டத்தில் "பொரிச்சக் குழம்பு" எனறு அழைக்கப்படும் இதை, வேறு சில இடங்களில் "பொரிச்சக் கூட்டு" என்றும் அழப்பார்கள்.
தாங்கள் கூறியுள்ளது போல், மோரில் ஊற வைத்து, பின் வெயிலில் காய வைத்து, சேமித்து வைத்துக் கொளவதும் உண்டு. இது "சுண்டை வத்தல்" என்று அழைக்கப்படும். பருப்பு சேர்க்காமல், சுண்டை வத்தலைப் போட்டு செய்யப்படும் குழம்பு "வத்தக்குழம்பு" இதற்கானப் பதிவை தனியாகக் கொடுத்துள்ளேன்.

தனியா என்பது "காய்ந்த கொத்துமல்லி விதை". மல்லி என்றும் சொல்வார்கள்.

தூயா - இந்த சுண்டைக்காய் கசக்காது. இது நாட்டுக் காய். அதாவது வீட்டுத் தோட்டத்திலேயே காய்ப்பது. காட்டு சுண்டைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது சற்று கசக்கும். அதிக பளபளப்பில்லாமல், மேலே கோடுகள் எதுவுமில்லாமல் இருப்பதுதான் நாட்டு சுண்டைக்காய்.

பெயரில்லா சொன்னது…

வணக்கம், சமையல்பதிவுகள் சம்பந்தமாக உங்களின் கருத்திற்கு நன்றி. உங்கள் மின்னஞ்சல் தெரியாததால் என்னுடையதை விட்டு செல்கின்றேன். நேரமிருக்கும் போது தொடர்புகொள்ளுங்கள்: tamilcooking@gmail.com

நன்றி :)

ஆ.கோகுலன் சொன்னது…

மேலதிக தகவலுக்கு மிக்க நன்றி. ஓ.. மல்லியையா தனியா என்கிறீர்கள்!. உங்களது 'வத்தக்குழம்பு' பதிவை தேடிக்கொண்டுபோய் அனைத்து செய்முறைகளையும் படித்தேன். அனைத்தும் தெளிவாகவும் சுருக்கமாகவும் புகைப்படங்கள் மிக அழகாகவும் இருந்தது.
ஆனால்... அந்த 'வத்தக் குழம்பு' மட்டும் கிடைக்கவேயில்லை..!! :-)

Kamala சொன்னது…

மன்னிக்கவும். வத்தக்குழம்பு புகைப்படம் இன்னும் எடுக்காததால், குறிப்பை சேமித்து வைத்திருந்தேன். இன்று பதிவில் சேர்த்து விட்டேன். புகைப்படம் விரைவில் சேர்த்து விடுவேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...