• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

புளி உப்புமா


தேவையானப்பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்
புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

நல்லெண்ணை - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 முதல் 3 வரை
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

புளியை தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து சாற்றை பிழிந்தெடுக்கவும். அத்துடன் தேவையான நீரைச் சேர்த்து 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, புளித்தண்ணீர், மஞ்சள் தூள், பெருங்காய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு கரைத்துக் கொள்ளவும். உப்பு சரி பார்க்கவும். கரைத்த மாவு இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி, அதில் எண்ணையை ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் மிளகாயைக் கிள்ளிப் போடவும், கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கி, அதில் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி, கை விடாமல் கிளறவும். மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் பந்து போல் உருண்டு வரும் பொழுது இறக்கி வைக்கவும்.

இதை அப்படியே சாப்பிடலாம். விருப்பப்பட்டால், தேங்காய்த்துவையலுடனும் சேர்த்து பரிமாறலாம். மேற்கண்ட அளவிற்கு 2 அல்லது 3 பேர் சாப்பிடலாம்.

இது எளிதாக செய்யக்கூடிய புளி உப்புமா. இதை அரிசி ரவா அல்லது பாம்பே ரவா உபயோகித்தும் செய்யலாம்.

இதையே புளித்தண்ணீருக்குப் பதில், 2 கப் புளித்த மோரில், அரிசி மாவைக் கரைத்து செய்தால் "மோர் களி" அல்லது "மோர் கூழ்" ஆகும். சாதரண கிளகாய்க்குப் பதில் மோர் மிளகாய் சேர்க்க வேண்டும். மஞ்சள் தூளைத் தவிர்த்து விட வேண்டும்.

அவலை உபயோகித்தும் புளி உப்புமா செய்யலாம்.

7 கருத்துகள்:

Jaleela Kamal சொன்னது…

கமலா எபப்டி இருக்கீங்க,
புளி உப்புமாவா வித்தியாசமா இருக்கு, புளி சேர்த்தால் கலர் மாறிடாதா, உங்களுக்கு மஞ்சள் கலரிலேயே நலல் இருக்கே.

கமலா சொன்னது…

வருகைக்கு நன்றி ஜலீலா. புதுப்புளி உபயோகித்து செய்தேன். மேலும் புளிச்சாறு (ஒரு நெல்லிக்காயளவு கரைத்தால்) ஒன்று அல்லது இரண்டு டேபிள்ஸ்பூன் தான் இருக்கும். அதை 2 கப் நீருடன் கலக்கும் பொழுது வெளிர் நிறமாகத்தான் இருக்கும். அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்தால், உப்புமா வெந்தவுடன் நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

புளி உப்புமா, மாலை சிற்றுண்டிக்காக, கிராமங்களில் செய்யப்படும் ஒன்று. மறந்து போன இது மறைந்து போகாமல் இருக்கத்தான் இந்தப்பதிவு.

mathy சொன்னது…

ஆஹா....ஒவ்வொரு ஐட்டங்களையும் பார்க்கும் போது சூப்பராகயிருக்கு...ரொம்ப நன்றி கமலா...

ஆமா உங்களிடம் 1 கேட்கலாமா..?
அதாவது நான் எழுதும் ஓர் தமிழ் இணையத்தில் உங்கள் பெயருடன் பதியட்டுமா...? மற்றவர்களும் பயன் பெற சம்மதமா சகோதரி..?

கமலா சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி மதி அவர்களே. என் குறிப்புகளை தங்கள் பதிவில் நிச்சயமாக இணைத்துக் கொள்ளலாம். என் பதிவிற்கு ஒரு இணைப்போ அல்லது என் வலைப்பதிவின் பெயருடனோ வெளியிட்டால் மிக்க நன்று.

மதி சொன்னது…

நன்றி! நன்றி!!..கமலா.
நிச்சயமாக அவ்வாறே செய்கிறேன்..
ஓரிரு நாட்களில் தங்களுக்கும் அவ் தளம் பற்றி அறியத்தருகிறேன்..

மதி சொன்னது…

வணக்கம் கமலா...
தாங்களும் சென்று பார்வையிடலாம்.."மங்கையர் ஸ்பெஷல்" பகுதியில பாருங்க..

மதி சொன்னது…

www.thamilworld.com

இங்கேதான் பதிந்துள்ளேன்....நன்றி கமலா..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...