• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

புடலங்காய் மசாலா அடைத்த கறி


இந்த கறியில் வெவ்வேறு விதமான மசாலைக்களை அடைத்து செய்யலாம். உருளைக்கிழங்கு மசாலா அல்லது காய்கறி மசாலா போன்றவற்றையும் சேர்த்து செய்யலாம். சாதாரணமாக இதில் தேங்காய், வெங்காயம் ஆகியவற்றை வதக்கி அடைத்து செய்வார்கள். நான் இதில் பருப்பு உசிலி சேர்த்து செய்துள்ளேன்.

தேவையானப்பொருட்கள்:


நீள புடலங்காய் - 1
துவரம் பருப்பு - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2 முதல் 3 வரை
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
எண்ணை - 3 to 4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பருப்பு உசிலி செய்ய:

துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதை நன்றாகக் களைந்து, நீரை வடிகட்டி விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக (மசால் வடைக்கு அரைப்பது போல்) அரைத்து எடுக்கவும். அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 7 முதல் 10 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுத்து ஆற விடவும். ஆறிய பின் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பைப் போட்டு சிறிது நேரம் கிளறி விடவும். பின் தேங்காய்த்துருவலைப் போட்டு மீண்டும் சில நிமிடங்கள் கிளறி இறக்கி வைக்கவும்.

புடலங்காயில் அடைக்க:

இதற்கு நீள வகை புடலங்காய் தேவை. அப்பொழுதுதான் ஒரே மாதிரியான துண்டுகள் போட முடியும்.

புடலங்காயைக் கழுவி, 2 அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும். ஒரு டீஸ்பூனால், ஒவ்வொரு துண்டுகளின் உள்ளே இருக்கும் விதை மற்றும் நாரை நீக்கி விடவும்.

ஒரு பாத்திரத்தில் 5 அல்லது 6 கப் தண்ணீரைக் கொதிக்க விடவும். நீர் நன்றாகக் கொதிக்கும் பொழுது அதில் சிறிது உப்பு மற்றும் சில துளி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து, புடலங்காய்த் துண்டுகளைப் போடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 2 நிமிடங்கள் கழித்து, புடலங்காய் துண்டுகளை எடுத்து விடவும். சிறிது நேரம் கொதிக்க விட்டால் போதும். காய் அதிகம் வெந்து, நிறம் மாறி விடக்கூடாது.

ஒவ்வொரு துண்டிலும் கொள்ளுமளவிற்கு பருப்பு உசிலியைத் திணித்து வைக்கவும். மீதமிருக்கும் அல்லது சிறிது உசிலியை தனியாக எடுத்து வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சிறிது எண்ணை தடவி, சூடானதும், புடலங்காய்த்துண்டுகளை பக்க வாட்டில் அடுக்கவும். சுற்றி 2 அல்லது 3 டீஸ்பூன் எண்ணை விடவும். மிதமான தீயில் மூடி வைத்து வேக விடவும். மூடியை எடுத்து விட்டு காயை திருப்பி விட்டு வேக விடவும். காய் நிறம் மாற தொடங்கியதும், கல்லிலிருந்து எடுத்து வேறொரு தட்டில் அடுக்கி, அதன் மேலே, தனியாக எடுத்து வைத்துள்ள உசிலியைத் தூவி விடவும்.

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வித்தியாசமாக உள்ளது ! இதுவரை இவ்வாறு உண்டதில்லை ! இதே போல் செய்யச் சொல்லிருவோம் ! நன்றி சகோதரி !

விச்சு சொன்னது…

இன்று வலைச்சரத்தில் தங்களின் இந்த சிறப்பான பதிவு. நேரம் கிடைத்தால் பாருங்கள்.மறக்காமல் தமிழ்மணத்தில் வாக்கினையும் பின்னூட்டமும் இடுங்கள். http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_15.html

கமலா சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் - வருகைக்கு மிக்க நன்றி.

விச்சு அவர்களே - என் குறிப்பிற்கு இணைப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி.

rajamelaiyur சொன்னது…

நல்ல ருசியான பதிவு ...

கமலா சொன்னது…

மிக்க நன்றி ராஜா அவர்களே.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...