• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

மிளகு காராசேவு

தேவையானப்பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்
கடலை மாவு - 1 கப்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
 
செய்முறை:

அரிசி மாவு, கடலை மாவு இரண்டையும் நன்றாக சலித்துக் கொள்ளவும். மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
 
ஒரு அகலமான பாத்திரம் அல்லது தட்டில் நெய், சமையல் சோடா, உப்பு மூன்றையும் போட்டு, விரல்களால் நன்றாக தேய்க்கவும்.  2 அல்லது 3 நிமிடங்களில் மூன்றும் கலந்து நுரை போல் வரும்.  அப்பொழுது அதில் சலித்து வைத்துள்ள மாவு, பொடித்த மிளகு சேர்த்துக் கலந்து விடவும்.  பின்னர் அதில் சிறிது சிறிதாக தண்ணீரை விட்டு மிருதுவாக பிசையவும்.
 
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் எண்ணை விட்டு காய விடவும்.  எண்ணை காய்ந்ததும், "காராசேவு கட்டையை" எண்ணைக்கு மேலே ஒரு கையால் பிடித்துக் கொண்டு, மறு கையில்  எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து,  கட்டையின் மேல் வைத்து அழுத்தித் தேய்க்கவும்.  காராசேவு  நீள துண்டுகளாக எண்ணையில் விழும்.  காராசேவை சாரணியால் சற்று திருப்பி வேக விட்டு, சிவக்க வெந்ததும், எண்ணையில் இருந்து அரித்து எடுக்கவும்.
 
பின்குறிப்பு:  "காரா சேவு கட்டை" வெவ்வேறு துளைகளுடன் கடைகளில் கிடைக்கிறது.  மிளகு சேவு செய்வதற்கு சற்று பெரிய துளையுள்ளக் கட்டை தேவை.  "காரா சேவு கட்டை" இல்லையெனில், சாரணிக்கரண்டியை உபயோகித்தும் செய்யலாம்.  முறுக்கு அச்சில், பெரிய துளையுள்ள "நட்சத்திர" வில்லையைப் போட்டும், முறுக்கு பிழிவது போல் பிழிந்தும் செய்யலாம்.

2 கருத்துகள்:

கோமதி அரசு சொன்னது…

சாத்தூர் காராசேவு புகழ் பெற்றது. அது போல் சுவை இருக்கும் என நினைக்கிறேன் செய்துபார்த்து விடுகிறேன். என் கணவருக்கும் பிடித்தமானது.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆஹா .... எங்க ஊரு காராசேவு மாதிரியே இருக்கே ! நன்றி சகோதரி !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...