- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
இட்லி சாம்பார்
இட்லிக்கு எந்த விதமான சாம்பாரையும் தொட்டுக்கொள்ளலாம். ஆனாலும், அதிக புளிப்பு, காரம் இல்லாமல் செய்யப்படும் இந்த சாம்பார், இட்லிக்கு கூடுதல் சுவைச் சேர்க்கும்.
தேவையானப்பொருட்கள்:
துவரம்பருப்பு - 1/2 கப்
பயத்தம்பருப்பு - 1/4 கப்
புளி - நெல்லிக்காயளவு
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 10 முதல் 15 வரை
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லித்தழை - சிறிது
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாகப் போட்டு, அத்துடன் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து, குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
புளியை ஊறவைத்து, கரைத்து 1/2 கப் வரும் அளவிற்கு, புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சாம்பார் வெங்காயத்தை, தோலுரித்து, நீளவாக்கில் ஒன்றிரண்டாக நறுக்கவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். தக்காளியையும் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், பெருங்காயத்தூள், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வாசனை வரும் வரை வதங்கியவுடன், தக்காளியைச் சேர்த்து சிறிது வதக்கவும். பின்னர் அதில் சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு போட்டு அத்துடன் புளித்தண்ணீரைச் சேர்த்து கலந்து, மூடி கொதிக்க விடவும். ஓரிரு நிமிடங்கள் நன்றாகக்கொதித்தவுடன், வெந்தப்பருப்பைச் சேர்த்து கிளறி விடவும். மீண்டும் கொதிக்கும் வரை அடுப்பில் வைத்திருந்து, கீழே இறக்கி வைத்து கொத்துமல்லித் தழையைத்தூவவும்.
குறிப்பு: எண்ணையில் வறுத்து அரைத்த சாம்பார் பொடியை உபயோகித்தால், சாம்பார் வாசனையாக இருக்கும்.
இதில், ஒரு உருளைக்கிழங்கு, ஒரு காரட் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி, வெங்காயம் வதக்கும் பொழுது அத்துடன் சேர்த்து வதக்கி சேர்க்கலாம். அல்லது விருப்பமான எந்தக்காயையும் சேர்க்கலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
ருசியான சாம்பாருக்கு பாராட்டுக்கள்..
நன்றி இராஜராஜேஸ்வரி.
இட்லி சாம்பார் பார்த்தேன் .செய்து பார்க்கிறேன்
Very super sampar
கருத்துரையிடுக