- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
பழக்கேசரி
இந்த கேசரிக்கு, விருப்பமான, சீசனில் கிடைக்கும் எல்லா விதமான பழங்களையும் உபயோகிக்கலாம். நான் இதில் வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளிப்பழம், சப்போட்டா மற்றும் ஆரஞ்சு பழம் சேர்த்து செய்துள்ளேன்.
தேவையானப்பொருட்கள்:
ரவா - 1 கப்
சர்க்கரை - 1 கப்
பழத்துண்டுகள் - 1 கப்
நெய் - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - சிறிது
உலர்ந்த திராட்சை - சிறிது
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
செய்முறை:
பழங்களின் தோல், மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கப் ரவாவிற்கு, ஒன்று முதல் ஒன்றரை கப் வரை பழத்துண்டுகளைச் சேர்க்கலாம்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு அதில் முந்திரிப்பருப்பு, திராட்சை இரண்டையும் வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு அதில் பழத்துண்டுகளைப் போட்டு, சிறு தீயில் 2 அல்லது 3 நிமிடங்கள் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மேலும் 1 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, அதில் ரவாவைக் கொட்டி ஓரிரு நிமிடங்கள் வறுத்து, இறக்கி வைக்கவும்.
அடி கனமான ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நீர் நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ரவாவைக் கொட்டிக் கிளறவும். ரவா வெந்தவுடன், சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். சிறிது பாலிலோ அல்லது நீரிலோ கேசரி பவுடரைக் கரைத்து ஊற்றி நன்றாகக் கிளறவும். பின்னர் அதில் வதக்கி வைத்துள்ள பழத்துண்டுகள், சிறிது நெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். கேசரி சற்று கெட்டியாகி, பாத்திரத்தில் ஒட்டாமல் வர ஆரம்பித்ததும், அதில் வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
கவனிக்க: இனிப்பு சற்று கூடுதலாக வேண்டுமெனில், மேலும் அரைக்கப் சர்க்கரை சேர்க்கலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
இன்று இதைப் பார்த்து தான் வீட்டில் செய்தோம். நன்றி சகோ!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"
நல்லதொரு குறிப்பு. பழத்துண்டுகள் சேர்த்து இதுவரை செய்ததில்லை. செய்து பார்க்கிறேன்.
கருத்துரையிடுக