• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பொரித்த மோதகம்


பூரண கொழுக்கட்டை அல்லது மோதகம் என்றழைக்கப்படும் கொழுக்கட்டையை அரிசி மாவில் செய்து ஆவியில் வேக வைப்பார்கள்.  ஆனால் கணபதி ஹோமம் போன்ற விசேஷங்களுக்கு, மைதா அல்லது கோதுமை மாவில் கொழுக்கட்டை செய்து எண்ணையில் பொரித்தெடுப்பார்கள்.   வட இந்தியாவில் "பொரித்த மோதகம்" மிகவும் பிரபலமான ஒரு பிரசாதம்.

தேவையானப்பொருட்கள்:

மேல் மாவிற்கு:

மைதா - 1 கப் (குவித்து அளக்கவும்)
நெய் அல்லது எண்ணை - 1 டீஸ்பூன்
உப்பு - ஓரிரு சிட்டிகை

பூரணத்திற்கு:

தேங்காய்த்துருவல் - 1 கப்
வெல்லம் பொடித்தது - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

மைதாவை நன்றாக சலித்து விட்டு, அத்துடன் உப்பு, ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணை விட்டு கலந்துக் கொள்ளவும். அதில் சிறிது சிறிதாக தண்ணீரைச் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து, ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.

வெல்லத்தில் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லப்பாகை மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்க விட்டு அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி விடவும். பின்னர் அத்துடன்   ஏலக்காய்த்தூள்  சேர்த்து நன்றாகக் கிளறி, இறக்கி வைத்து ஆற விடவும்.

ஒரு பெரிய நெல்லிக்காயளவு மாவை எடுத்து, மெல்லிய பூரியாக இட்டு, அதன் நடுவில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு பூரணத்தை வைத்து, எல்லா மூலைகளயும் சேர்த்து, மேல் பாகத்தை நன்றாக அழுத்தி விட்டு மோதகம் செய்து கொள்ளவும்.  எல்லா மாவையும் இப்படியே செய்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், 4 அல்லது 5 மோதகங்களை போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

இதை மைதா மாவிற்குப் பதில் கோதுமை மாவை உபயோகித்தும் செய்யலாம்.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வித்தியாசமாக இருக்கிறது... இதுவரை செய்ததில்லை... செய்து பார்ப்போம்... நன்றி...

பெயரில்லா சொன்னது…

instead of maida or atta one more way people prepare this is with nice rava.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...