இந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் வருகிறது. மிகவும் தொன்மை வாய்ந்த இத்திருநாள், தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது. கி.மு 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகைத் தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
இத்தீபத்திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த தீபம், ஐந்தரை அடி உயரமும், ஐந்தடி நீளமும் உள்ள ஒரு இரும்பு கொப்பரையில், 2000 கிலோ நெய்யை விட்டு, முப்பது மீட்டர் காடாத் துணியைச் சுருட்டி அதைத் திரியாகப் போட்டு அதன் மேல் இரண்டு கிலோ கற்பூரத்தை வைத்து ஏற்றப்படும். இந்த மகாதீபம் மலையைச்சுற்றி 35 கிலோமீட்டர் தூரம்வரை தெரியும்.
இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்தத் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
பெரும்பாலோனோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள். நகர்புறங்களில் இட நெருக்கடி இருந்தாலும், பால்கனி, மொட்டைமாடி சுவர், மாடிப்படிகட்டுகள், சன்னல் விளிம்புகள் என்று எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் விளக்கேற்றி வைப்பார்கள். பாரம்பரியமாக களிமண்ணால் செய்யப் பட்ட சிறு அகல் விளக்குகள்தான் ஏற்றி வைக்கப்படும். ஆனால் இப்பொழுது வேறுவகை விளக்குகளும், அலங்கார மெழுகுவத்திகளும் ஏற்றப்படுகின்றன.
இத்திருவிழாவின் இன்னொரு சிறப்பம்சம் "சொக்கப்பனை கொளுத்துதல்". கோவிலுக்கு அருகே, திறந்த வெளியில், ஒரு காய்ந்த மரத்துண்டை (அனேகமாக பப்பாளி மரத்தண்டு) நிறுத்தி அதனைச் சுற்றி காய்ந்த பனை மட்டைகளைக் கட்டி வைப்பார்கள். இதற்கு சொக்கப்பனை என்று பெயர். சாயங்காலப் பூஜை முடிந்து விளக்கேற்றிய பின்னர், கோவில் அர்ச்சகர் வெளியே வந்து, சொக்கப்பனைக்கு தீபாராதனைக் காட்டி அதைக் கொளுத்தி விடுவார். பனை மட்டையில் தீ பிடித்ததும் படபடவென்று ஒசையுடன் வெடித்துக் கொண்டே கொழுந்து விட்டு எரியும். இதற்கு புராணங்களில் வெவ்வேறு கதைகள் கூறப்பட்டிருந்தாலும், ஒருவேளை இதுதான் அந்நாளைய பட்டாசோ??
இதனால் தானோ இன்னமும் இத்திருநாளன்று சிறுவர்கள் பட்டாசு (பெரும்பாலும் தீபாவளிக்கு வாங்கியதில் மிச்சம் பிடித்தது) வெடித்து மகிழ்கிறார்கள்.
ஏற்றப்பட்ட விளக்குகள் அனைத்தும் தீயனவைகளைத் தடுத்து நல்லனவைகளைத் தரும் என்பது நம்பிக்கை. அகல் விளக்கோ அல்லது அழகிய சிறு மெழுகுவத்தியோ, இருண்ட மாலை வேளையில் வரிசை வரிசையாய் ஒளிரும் இத்தீபங்களைக் காண்பதே கொள்ளை அழகு.
இத்திருநாளில் ஏற்றப்படும் ஒவ்வொரு தீபமும் நம் வீட்டிற்கு மட்டுமின்றி அனைவர் வாழ்விலும் ஒளி பரவ செய்யட்டும்.பண்டிகை என்றால் பலகாரமில்லாமலா! இதோ கார்த்திகை சிறப்பு சமையற்குறிப்புகள்:
கார்த்திகை பொரி
கார்த்திகை அப்பம்
பனை ஓலை கொழுக்கட்டை
மிளகு அடை
4 கருத்துகள்:
உங்க கார்திகை அப்பம் தான் இந்த முறை முயற்ச்சித்து பாக்கபோகிறேன்...
இனிய தீபதிருநாள் வாழ்த்துகள்.
வருகைக்கு மிக்க நன்றிஹர்ஷினி அம்மா. அப்பம் செய்து பார்த்து தங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்.
பகிர்விற்கு நன்றி சகோதரி !
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."
superb blog! i like it so much
Why This Kolaveri D | All in one Link - Song, Lyrics, Video & Stills
கருத்துரையிடுக